ஊருக்கு மாவிடித்தல்
ஊருக்கு மாவிடியுங்கள், ஆனால் லட்டை சபிக்க வேண்டாம்.
(இப்போ தும்மினால் தான் சரி)
பூந்தியும் லட்டுவும் வேறு வேறு அல்ல. கல்யாண அடியந்திரங்களுக்கும், இழவு வீடுகளுக்குமே பொது விளம்பல் 'பழ'காரத்தில் ஒன்று. மறுவீடுக்கு, பெண் பிள்ளைகள் சமைந்த வீடுகளில் இறந்த வீட்டு "கிழமை முறை"களில் பூந்தியும் பழமும் ஊர் விளம்பவில்லை என்றால், ஊருக்குள் பெரிய ஆவலாதி தான். "ஆளத்து போனவன்", "ஊருக்கு விளம்ப வக்கில்லை போல்", "வீட்டுக்கு வாழ வந்தவ பூந்தியும் பழமும் கூடவா கொண்டு வர துப்பில்லை" என்று வசைகளை எதிர் கொள்ள நேரிடும். இந்த வசைகளை அதிகம் உதிர்ப்பது, சடங்கு வீட்டிலும் இழவு வீட்டிலும் தீட்டு என கைநனைக்காமல் தன்னை பெருவிர்த்திக்காரனாக காட்டும் சிறுபுத்திக்காரர்களே!
பூந்திக்கு முன் மாவுதான். மாவு எனில் அரிபெட்டியில் ஊறப் போட்ட பச்சரிசியை வெள்ளைத் துணியில் சிறிது உலரவிட்டு உரலில் போட்டு குடும்பம் சுத்தி நின்று உலக்கையில் இடிக்கும். ஊர் கதை குடும்பக் கதை எல்லாம் கூட இடிபடும். மெத்தெனும் மாவினில் உலக்கை விழும் "பொத்-பொத்" எனும் சத்தத்தை மீறி எதுவும் ரகசியங்கள் வெளியே சிதறாது. இப்போது, ஒரு பேனை சுழல விட்டுவிட்டு, போனில் வீட்டுப்பாடுகளை வெளியெங்கும் ஒப்புவித்து விடலாம். அதுவும் ரகசியம் என்றே அழைப்பது காலமுரண்! மாவை அரிப்பில் போட்டு அரித்து அரித்து கப்பியை நீக்கி, மீண்டும் உரலில் அரித்து வைத்த மாவையும் சீவி வைத்த கருப்பட்டியும் போட்டு லேசாக வெறுவி எடுத்தது போல் ஐந்தாறு இடிப்பு இடித்தால், கருப்பட்டியில் இருக்கும் பசைத்தன்மையில் மாவையும் உருட்டி விடலாம். உருட்டிய மாவின் நடுவே இடிபடாத கருப்பட்டி இளகி வழிந்து நிற்கும். முன்பற்களில் நறுக் என கடிபடுகையில் நுனி நாக்கில் இறங்கும் தீஞ்சுவை. மாவும் கருப்பட்டியும் கலந்து மூக்கில் ஏறும் நறுமணத்திற்கு என்று ஒரு போதை உண்டு.
மாவிடிப்பது குடும்பம் அல்லது சமூக செயற்பாடு எனில், அதன் தொழில் வயப்பட்டது பூந்தி லட்டு. இது வைப்புக்காரர்கள் வேலை ஆனது. இப்போது விலைக்கும் வாங்கி விடலாம் பலகார பந்திகளில் ரகரகமாய் இருக்கிறது. சடங்கு என்பது வியாபார வயப்பட்டு விட்டது இங்கு. எதுக்கு எதை சாப்பிட என்று அறியாமல் கதம்பமாய் கட்டி அழ பழகிவிட்டனர்.
கல்யாண வீடுகளில் வைப்புக்காரர் லிஸ்ட் எழுதும் போது குட்டி லிஸ்ட் ஒன்று கூட வரும். பந்தியில் பால் பாயாசத்துக்கும், மறுவீட்டிற்கு கொடுத்து விட என்றும் பூந்தியும், வரவேற்புப் பதார்த்தங்களில் வைக்கப்படும் லட்டு பிடிக்க காரப்பூந்தி என்று குட்டி லிஸ்டில் சீனி, கடலை மாவு , நயம் நெய், ஏலம் சுக்கு என்று இருக்கும். ஒருநாள் முன்னதாக வந்துவிடுவார் பூந்தி போட.
அரித்தெடுத்த கடலைமாவை நீர் சேர்த்துக் கலக்கி சிறிது மஞ்சள் நிறத்திற்கும், பேருக்கு ரெண்டு உப்புமிட்டு, பொரிக்க வறுக்க பயன்படுத்தும் கண் ஆப்பையை கொதித்துக் கொண்டிருக்கும் கடலை எண்ணெயின் மேலே வைத்தவாறு இந்த மாவுக்கரைசலை ஊற்றினால் முத்து பொரியும். "முத்தடிப்பது" என்பர் வைப்புக்காரர்கள். லட்டு ஆகும் முன் அதன் முந்தைய பருவம் பூந்தி, அதன் இடப்பாகம் தான் காராப்பூந்தி. இவற்றிற்கு முன் அதன் பெயர் முத்து. லட்டுக்கு அரைவேக்காட்டிலும், பூந்திக்கு முறுவலாக வேகவைத்தும் முத்து பிரிப்பர். முறுவ வெந்த முத்தில், வத்தல், மிளகு தூளோடு தூக்கலாக உப்புமிட்டு, தட்டிப்போட்ட பூண்டில் கறிவேப்பிலையை சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி முத்த்தில் சேர்த்து கிளறி எடுத்தால் காரமான மொறு மொறு என்ற காராப்பூந்தி ரெடி. அதே முத்தில் சீனிப்பாகு காய்ச்சி ஊத்தி, நெய்யும் கலந்து கிண்டி எடுத்து, ஏலம் கிராம்பு தட்டி பொடியாக்கி போட்டு சேர்த்தால் மனமான சுவையான பூந்தி.
வேக்காடு குறைந்த முத்தில் பூந்தி செய்து, அதை நன்கு இடித்தால் தான் லட்டு பிடிக்க நிற்கும் பூந்தி. வசதிக்கு ஏற்ப அண்டியும் கிஸ்மஸ் பழமும் சேர்த்துக் கொள்ளலாம். ஆஞ்சநேயர் ஜெயந்திக்கு சுசீந்திரம் கோவிலில் பல நாட்களாக நடக்கும் லட்டு பிடித்தல்.
பிடித்த லட்டு யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்.
படத்தில் கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் உள்ள மரஉரல், இங்கே வீடுகளில் கடைசியாக பயன்பட்டது கல் உரலும், கணத்த இரும்பு பூண் போட்ட மர உலக்கையும் தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக