இசை
ஐந்து வருடங்களுக்கும் மேலாக ரிங் டோனாக வைத்திருப்பது புன்னகை மன்னன் திரைப்படத்தில், ரேவதியுடனான காதலை கமல் சொல்லுமிடத்தில் வரும் தீம் மியூசிகை தான். முதல் புளூட் முடிந்து தொடரும் கீ - போர்டு இசை தான் சரியான ஆரம்பம் ரிங் டோனுக்கு. அந்த இரண்டரை நிமிட காட்சியை எப்போதும் சிலாகித்துப் பார்த்தது உண்டு. அதில் கமலின் நடனம் என்பது இவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்து இருக்கிறாரே என்ற பிரமிப்பு தான் ஏற்பட்டு இருந்தது.
வெகு நாட்களுக்கு பிறகு இன்று காலை அந்த தீம் மியூசிக் வீடியோவை பார்க்கும் போது அந்த நடன அமைப்பு ஒட்டவே இல்லை. அல்லது என் புலன்களுக்கு அப்பால் சென்று விட்டது காட்சிப் படிமம். திரும்ப திரும்ப பார்த்தேன். எந்த விதத்திலும் ஒட்டவில்லை. ஒரு நாள் முழுவதும் ஆன பிறகும் அந்த இசையையும் காட்சியையும் சேர்த்து ஒன்ற முடியவில்லை. இசைக்கு சம்பந்தமே இல்லாத காட்சி போல உருத்தலாகவே மாறிப் போனது. அதை விட இந்த இசைக்கு பொருத்தமே இல்லாத ஓவர் டோஸ் நடனத்தை ஏன் கமல் ஆடியிருக்கிறார் என்றும், அந்த இடம் கமலின் சிறுபிள்ளை தனமாகவுமே நினைக்க தோன்றியது.
ஐந்து வருடங்களாக, அந்த இசைத் துணுக்கை யாரேனும் ஒருவரின் அழைப்பாக கேட்டுக் கேட்டு, அந்த இசை ஒரு அன்பின், எதிர்பார்ப்பின் தேவையின் அல்லது உணர்வின் இன்னபிற வடிவங்களின் அழைப்பின் வடிவமாக மாறிப் போயிருக்கிறது. அந்த கீ போர்ட் ஒலிக்க தொடங்கும் அதே வேகத்தில் மனமும் மொபைலை எடுக்க தயாராகும். இளையராஜா அந்த வடிவமாகவே எனக்குள் மாறி இருக்கிறார். அந்த இடத்தில் அந்த காட்சி எனக்குள் இருந்து வெளியேறி இருக்கிறது.
ராஜாவின் அந்த இசைக்கு இப்போது பல முகங்கள். ஒவ்வொன்றிற்கும் என் நண்பர்களின் முகங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக