அம்மையப்ப பிள்ளை
அம்மையப்ப பிள்ளை சாருக்கு
கண்ணீர் அஞ்சலி:
100 களின் கதாநாயகர் இவர். இவரிடம் கணிதம் பயின்ற யாரையும் அந்த நூறை தொடச் செய்யும் சூட்சமம் அவரிடம் உண்டு. கிரிக்கெட்டில் சச்சின் துரத்துவதை விடவும் வேகமாக ஒரு துரோணராக தன் மாணவர்களை நூற்றுக்கணக்கில் நோக்கி திருப்பும் திறமை பெற்றவர்.
முப்பது வருடங்ளுக்கு முன்பு இவரிடம் பத்தாம் வகுப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். ஆங்கிலம் கணிதம் இரண்டும் தான் பாடம். வடசேரியில் அப்போது புகழ் பெற்ற தெய்வநாத் எனும் நாட்டு மருந்துக் கடையின் மாடியில் சுண்ணாம்பு காரை அறை தான் அவர் பயிற்சி வகுப்பறை. பெல் பாட்டம் பேண்ட், வீதியான காலர், கச்சிதமான அளவில் தைக்கப்பட்ட சட்டையோடு, முறுக்கிவிடப்பட்ட மீசை, அடர்முடியோடு ஆஜானுபாகுவான தோற்றம். பூமிக்கு வலிக்காது நடந்து வரும் நடை, எதிர் கொண்டாரை நின்று பேசும் இயல்பு, அவர் வரும் முன் கொண்டாட்ட வெளியாய் இருக்கும் அறை அவர் நுழைந்ததும் கப் சிப் ஆகும், வகுப்பு முடியும் வரை உட்கார மாட்டார். ஒரு நாளிலே எழுதி அழித்து தரையெங்கும் நிறைந்து விடும் சாக்பீஸ் துகள்கள். சேட்டை பசங்களையும் நக்கல் பேர்வழிகளையும் அதிர்ந்து பேசாமலேயே வழிக்கு கொண்டு வருவார். எப்பேர்பட்ட மாணவரும் சில மாதங்களிலேயே படிக்கும் ஆர்வத்திற்கு வந்து விடுவர்.
கணிதத்தில் அந்த வருடத்தில் சிலர் நூறு மதிப்பெண்கள் எடுத்து விட, அவர் மிகவும் எதிர்பார்த்த நான் ஒரு மார்க்கில் தவறவிட்டேன். அதற்கு பிறகு அவரை சந்திக்கவே இல்லை இன்று வரை. அவர் நம்பிக்கையை இல்லாமல் ஆக்கிய குற்ற உணர்வு முப்பது வருடங்களாக என்னை துரத்திக் கொண்டே இருந்ததால், எனக்கும் அவருக்குமான இடைவெளி ஒரு மதிப்பெண்ணில் விழுந்து விட்டது. ஒரு மதிப்பெண் என்பது அவரின் பயிற்சியில் பெரும் இழப்பு என்பதை உணர செய்தவர்.
எல்லோருக்கும் நூறு பரிசளித்தவர் இன்று இயற்கை எய்தி விட்டார். நான் இன்று சுமந்து திரியும் அந்த ஒற்றை மதிப்பெண்ணை அவருக்கு காணிக்கை ஆக்குகிறேன். அது எல்லா நூறுகளையும் விடவும் மதிப்பு மிக்கது. வாழ்வில் நிறைய பாடங்களை சொல்லித் தந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக