சுசீந்திரம் திருவிழா

சுசீந்திரம் திருவிழா பதிவு 1

நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் சுசீந்திரம் கோவில் திருவிழா தொடங்குகிறது.

பெருந்தெய்வ வழிபாட்டில் மகாத்ஸ்வங்கள் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர கொண்டாட்டம் ஆகிறது.

ஆகம விதிப்படி ஒரு மகாத்ஸ்வம் தவிர்க்க முடியாத ஏழு நிகழ்வுகள் அல்லது விழாவினை நிகழ்த்தியிருக்க வேண்டும். அவை,

1. த்வஜாரோஹணம்.

கொடியேற்ற நிகழ்வு. இது முதல்நாள் காலை. மகா உற்சவத்தின் ஆரம்பத்தை இது அறிவிக்கிறது.

2. அங்குரம் . 

நவதானியங்கள் பாத்திரத்தில் நிரப்பி அவற்றை முளைவிட செய்து செழுமையை கொண்டாடுவது.

3. ம்ர்கயோத்ஸவம் என்கிற வேட்டை.

வேட்டையாடுவதை குறிப்பது. அதன் அடையாளமாக சாமி வாகனத்தில் வேட்டையாடும் ஆயுதங்களை வைத்திருப்பது. ஏழாம் திருவிழா கைலாசபர்வத வாகனம் வேட்டையின் நிறைவை குறிப்பது.

4. சயனத்சவம் :  

கடவுள் துயில் கொள்ளுவதை கொண்டாடும் நிகழ்வு. ஏழாம் திருவிழா காலை, எல்லா சாமி விக்ரகங்களும் பல்லக்குகளில் வீதி வலம் வருவர்.

5. ரதோத்ஸ்வம் எனும் யாத்ராத்ஸ்வம்.

தேரோட்ட நிகழ்வு. சாமி அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஊர்சுற்றி வருவது சுற்று உலா என ஆகமங்கள் கூறினாலும், பலர் இந்நிகழ்வை காண சுற்றுலாவாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

6. பக்த்தோஸ்த்தவம். 

கடவுள் மீது உண்மையான பக்தி உடைய ஒருவனுக்கு இவ்விழா ஒரு எழுச்சி அளிப்பதாக கூறுகிறது. ஐந்தாம் திருவிழா அதிகாலை கருட தரிசனமும், எட்டாம் திருவிழா அதிகாலை தில்லேலம்பலமும், ஒன்பதாம் திருவிழா இரவு சப்தவர்ணமும் இவ்வித உணர்வினை கொடுக்க கூடியது. இந்நாட்களில் மக்களின் மனதை உருக வைக்கும் வாத்திய இசைகள் இன்று வரை சிறப்பாக வாகனத்தின் முன்பு சென்று கொண்டிருக்கிறது.

 
7. தீர்த்தவாரி அல்லது ஆராட்டு. 

இது பத்தாம் திருவிழா ஆருத்ரா தரிசனம் முடிந்து பிறகு நடக்கிறது. 

நவதானியம் முளைய செய்தல் மட்டும் இப்போது நிகழ்ந்ததாக தெரிய வில்லை. கனகசபாதி பிள்ளை அவர்கள் எழுதிய ஆய்வு நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதுவே திருமணம் அன்றும் நடைபெறுகிறது. ஏழாம் நாள் நீரில் கரைத்தல். தமிழர்களின் அடையாளம் அது. தமிழ் நாட்டில் இன்றும் இதற்கென தனிவிழாவே நடக்கிறது. இங்கு "நிறைத்தல்" என்பதும் திருவிழாவில் இருப்பதாக தெரியவில்லை. தனியாக நடக்கிறது. பெரும் விழாவாகவும் இல்லை. நன்செய் விளைந்த நாஞ்சில் நாட்டில் அது இல்லாமல் போனது, ஆகமங்கள் இங்கு கேரளா வழியாக வந்ததும் காரணமாக இருக்கலாம். திருவிதாங்கூர் மன்னர்களுக்கு இத்திருவிழா என்பது பிடாகைக் காரர்களிடம் வரிவசூல் கணக்கு பார்த்து முடிக்கும் ஒரு நிகழ்வும் கூட. ஒன்பதாம் திருவிழா இரவு சாமியை சத்தர்ணத்திற்கு அனுப்பி விட்டு, செண்பகராமன் மண்டபத்தில் இருந்து 12 பிடாகைத் தலைவர்களையும் நாட்டுக் கூட்டத்தையும் கூட்டி மொத்த வரியையும் பைசல் செய்தது வரலாறு!

பதிவு 2

1940 களுக்கு முன்பு சுசீந்திரம் திருவிழா எப்படி நடைபெற்றது என்பதை கனகசபாபதி பிள்ளை தன்னுடைய சுசீந்திரம் டெம்பிள் எனும் ஆய்வு நூலில் எழுதயுள்ளார். கொடியேற்றத்திற்கு முந்தைய நாள் நிகழ்வு கீழ் வருமாறு.

ஓம்க்த்ரபலிபடித்தரம் : 

கொடியேற்ற நாளுக்கு முன் ஓம்க்த்ரபலிபடித்தரம் எனும் தனித்துவமான நிகழ்வு நடைபெறுகிறது. அந்தி தீபாதரனைக்கு பின்னும், அத்தாழ பூஜைக்கு முன்னும் கோவிலின் முக்கியஸ்தர்கள் வீரபாண்டியன் மணி மண்டபத்தில் ஒன்று கூடுகிறார்கள். தந்திரி, மேல்சாந்தி, ஸ்தானிக்காரர், சபைக் கணக்காளர், கண்காணிப்பாளர், தேவஸ்தானத்தின் கோவில் மேலாளர், மற்றும் தலைமை எழுத்தர். 

எல்லோரும் ஒன்று கூடிய பிறகு, சாந்திக்காரர் என்று அழைக்கப்படும் முன்னூற்று நங்கை அம்மன் கோவிலின் தலைமை பூசாரி முன் வந்து, ஒவ்வொரு நாள் நிகழ்வுகள், தெய்வத்தின் வாகனம் மற்றும் கொண்டாட்டம் குறித்த முழுத் தொகுப்பையும் உரக்க சொல்கிறார். "நானும் கோவில் நிர்வாகிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் நீண்ட ஆயுள் மற்றும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும்" என்று தெய்வத்தை வேண்டி உரையை முடிக்கிறார். இறுதியாக மண்டபத்தில் மணி அடிக்கிறது.

ஓம்காரபலி:

   த்வாஜரோஹனம் எனும் கோடியேற்றத்திற்கு முந்தைய நாள் இரவு 12 மணிக்கு, தந்திரிகள் தலைமையில் பூஜாரிகள் அர்ச்சகர்கள் அடங்கிய ஒருகுழு, மந்திரங்கள் உச்சரித்த படி, பூக்களையும், சமைத்த அரிசியையும் கோவிலை சுற்றி உள்ள முக்கிய வீதிகள் வழியாக வீசி செல்கின்றனர். அங்கே சுற்றித் திரியும் தீய சக்திகளை கட்டுப் படுத்துவதே அதன் நோக்க்கம் என்று நம்பப் படுகிறது. 

ஆவிகளின் சக்தியை கட்டுப்படுத்தும் இம் மந்திரங்களின் மூலம் என்பது காளி மற்றும் யக்சிகள் ஆகும். இவை சங்கராச்சாரியார் காலத்தில் இருந்தே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

"ஓங்காரபலி" (ஓங்காரி, ஆங்காரி , அடங்காவல்லி) என்பது உண்மையில் காளியை திருப்திப் படுத்தும் ஒரு நிகழ்வு. பத்து நாட்களும் காளியின் துணையோடு திருவிழா நிகழ்கிறது. இதை ஆரியம் வழி வந்த பெருந்தெய்வ வழிபாட்டு முறையில் ஏற்றுக் கொள்வதன் மூலம், அவர்கள் அதற்கு முன்பே இங்கிருந்த கிராமத்து தெய்வங்களுடன் கலப்பதை தான் பிரதிபலிக்கிறது.

தொடரும்...

சுசீந்திரம் திருவிழா பதிவு -3
       - முத்துசுவாமி மகாதேவன்.

ராஜராஜ சோழனின் சதயமும், நடராஜரின் திருவாதிரையும், பாணியும் சைவத் திருமுறைகளும்.

த்வஜாரோஹணம் எனும் பெயரால் 
திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுதல் முக்கிய அங்கம் வகிக்கிறது. இது சைவ துறவியான மாணிக்கவாசகரை சாந்தப்படுத்தும் நிகழ்வாக நடப்பதாக KK பிள்ளை குறிப்பிடுகிறார்.. 

இதற்காக மாணிக்கவாசகரின் உற்சவ உருவம் வடக்கேடத்தில், நந்தியின் வடக்கு திசையில் இருக்கும் சபாபதி (நடராஜர்) சன்னதியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, அதே ரிஷப மண்டபத்தில் நந்திக்கு பின்புறம் வைக்கப்பட்டு, தீபஆராதனை காட்டப்படுகிறது. 
அதன்பிறகு கொடிக்கு பூஜை காட்டப்படுகிறது. கொடியில் சிவப்பு நிறத்தில் காளையின் உருவமும், மணி, தூபம் போடும் பாத்திரம் போன்ற பூஜை பொருட்களும் வரையப்பட்டுள்ளன.  

மாணிக்கவாசகருக்கான பூஜையும் கொடிக்கான பூஜையும் வட்டப்பள்ளி மடத்தில் உள்ள ஸ்தானிகர் செய்கிறார்.

பின்னர் மூங்கில் சட்டத்தில் கொடி கட்டப்பட்டு முதலில் கோவிலின் நான்கு பிரகாரங்களிலும், பின்னர் சுசீந்திரத்தின் முக்கிய வீதிகள் வழியாகவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு கொடி எடுத்துச் செல்லப்படும் போது தெருக்களில் சந்திப்புகள் மற்றும் தெருக்களில் அமைந்துள்ள சிறிய பீடங்களுக்கு முன்னால் மந்திரம் ஓதுவதற்கு மலர்கள் தண்ணீர் மற்றும் அன்னம் எடுத்துச் செல்லப்படுகிறது.

மீண்டும் கோயிலுக்குள் கொண்டு வரப்படும் கொடி மூங்கில்சட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு வடக்கேடத்தின் கொடிகம்பத்திற்கு அருகில் உள்ள பலிபீடத்தின் மேற்கு முகத்தில் தொங்க விடப்படும். 
பூஜை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று துணியின் ஒரு மூலையில் கட்டப்படும். பின்னர் கொடியின் முன் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் வட்டப்பள்ளி ஸ்தானிகர், ஒரு விரிவான பூஜையை நடத்துகிறார். பூஜைக்கான பொருட்கள் வெள்ளியாலும் தண்ணீர் வைத்திருக்கும் குடம் பளபளக்கும் தங்கத்தாலும் இருக்கும்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடக்கும் பூஜையில், மேளங்களும் வாத்தியங்களும் தொடர்ந்து இசைக்கப் படுகின்றன. கோவிலுடன் தொடர்புடைய முக்கிய வாத்தியமான "பாணி"யை மூன்று பேர் இசைக்கிறார்கள். அவர்கள் மூவரும் கேரள மாறன்கள். பாரிசைவர்கள் பற்றாக்குறையால் அக்கருவியை மாறன்கள் இசைப்பதாக KK PILLAI குறிப்பிடுகிறார். 

பொதுவாக பாணி இசைக்கப்படும் இடம், திருமுறைகள் பாடப்படும் இடம். 

ராஜராஜ சோழனின் காலத்தில் நம்பியாண்டார் நம்பி தொகுத்த பன்னிரு திருமுறைகளில் பல இடங்களில் பாணி பற்றிய குறிப்புகள் உள்ளன. இசையோடு அமைந்த "பண்" ஆன திருமுறைகள் பாணியோடு இசைக்கப்படுகின்றன. 

"அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும் பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர் சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக் கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே." 

    திருஞான சம்பந்தர்.

பெரியபுராணத்தில் , "வியன் குடி திமிலை" என்கிறார்கள். திமிலையும் பாணியும் சோழர்கள் காலத்தில் முக்கியத் துவம் கொண்ட பக்கவாத்தியமாக இருந்து இருக்கிறது. 

சுசீந்திரம் கோவிலில் இசைக்கப்படும் "பாணி"யின் முக்கியத்துவம், சமஸ்கிருத மந்திரங்களுக்கு முன்பு இங்கு ராஜராஜன் காலத்தில் திருமுறைகள் ஓதப் பட்டிருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது. இராஜராஜனின் சதயம் நட்சத்திரமும், திருவாதிரையன் ஆன நடராஜர் சன்னதியில் இருந்து வெளியே எடுத்து முதலில் வைக்கப்படும் மாணிக்கவாசகர் பூஜையும், இத்திருவிழா சோழர்கள் காலத்தியவையாக இருக்கலாம்.

ஓதுவார்கள் போய் ஸ்தானிகள் கைக்கு வழிபாட்டு முறை வரும் போது, பாணி இசைக் கருவியும் பாரிசைவர்கள் கையில் இருந்து மாறன்கள் கைக்கு மாறியிருக்க கூடும். 

பூஜை முடிந்ததும் மேள தாளத்துடன், கொடி ஏற்றப்படுகிறது. கொடிமரத்தின் அடிவாரத்தில் ஒரு பரிவட்டம் கட்டப்பட்டு, அதன் மேல், புதிய தர்ப்பை புல், மாவிலை , அரசிலை மற்றும் இலைகள் கட்டப்பட்டவுடன், வட்டப்பள்ளி ஸ்தானிகர். கொடிமரத்தின் தெற்கே வடக்கு நோக்கி அமர்ந்து மீண்டும் பூஜையைத் தொடங்குகிறார். ஒன்பது பானை இளநீர் அவர் முன் வைக்கப்பட்டு நவகலச பூஜை என்று அழைக்கப்படும். 

நவகலச பூஜையால் புனிதப்படுத்தப்பட்ட நீரைக் கொண்டு கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு நெய்வேத்யம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 கொடிமர சடங்குகள் முடிந்ததும், கோவிலின் முக்கிய அதிகாரிகளும் முக்கிய குடிமக்களும் கோவிலின் பிரதான வாகனமான சாமி தேர் நிற்கும் இடத்திற்குச் சென்று, கால் நாட்டுவிழாவை நடத்துகிறார்கள். . தேரின் ஒரு அடுக்கில் மரத்தூண் அமைத்து, அதில் சந்தனமும், குங்குமமும் அபிஷேகம் செய்து, மாவிலைகளைக் கட்டிக் கொள்வார்கள். இந்த விழா உற்சவ கொண்டாட்டத்தின் தொடக்க விழாவாகும். இதேபோல், மற்ற மூன்று தேர்களிலும் ஒரு கால் அல்லது மரக் கம்பம் நடப்படுகிறது. உற்சவம் ஆரம்பமாகிவிட்டதாக இங்கே கொடி பறப்பது போல், தேர் திருவிழா 9ம் நாளன்று நடைபெறும் என்று அறிவிக்கறது.

அன்று மாலை சுமார் 4 மணியளவில், கணபதி (சபாபதி சன்னதியில் உள்ள வெண்கலப் படம்) ஒரு முஷிக வாகனத்தில் அமர்த்தி தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். கணபதி (விக்னேஷ்வர்) அனைத்து தடைகளையும் விரட்டுவதோடு மட்டுமல்லாமல் அறியாமையின் இருளை அகற்றுவதாகவும் நம்பப்படுகிறது. 

(திருவிழாக் குறிப்புகள் அனைத்தும் "the suchindrum temple" எனும் KK பிள்ளையின் ஆய்வு நூலில் உள்ளது. இப்போது இதில் உள்ள சில முறைகள், காலத்தால் மாறியிருக்க கூடும்)

சுசீந்திரம் திருவிழா பதிவு 4.
Muthuswamy mahadevan.

பெருந்திருவிழாவின் எழுவகை விதிகளாக ஆகமங்கள் கூறியதில் ஏழில்,
த்வஜாரோஹணம்
ம்ர்கயோத்ஸவம்
சயனத்சவம்
ரதோத்ஸ்வம்
பக்த்தோஸ்த்தவம்
தீர்த்தவாரி
எனும் ஆறும் சமஸ்கிருத மயமாகிவிட, விழாக்கள் சீரும் சிறப்புமாக நடக்கிறது. அங்குரம் என்கிற ஒன்று மட்டும் நடைபெறுவதாக தகவல் இல்லை என்று எழுதியிருந்தேன். முதல் நாள் திருவிழாவில் நடைபெறுகிறது. பத்தாம் நாளில் ஆராட்டின் போது நீரில் கரைக்கிறார்கள்.

"திங்கள்சேர் சடையார்தம்
திருவருட்குச் செய்தவத்தின்
#அங்குரம் போல் வளர்ந்தருளி
அருமறையோ......" 
என்கிறது பெரிய புராண வரிகள். 

அங்குரார்ப்பணம் எனும் சொற்றொடர் அறியப் படுகிறது.

விவசாய பெருங்குடி நிலங்களில் நிகழ்த்தப் படும் பெருவிழா இது. முதலாம் நாள் தானிய விதைகளை ஆற்று வண்டலும் சாணமும் கலந்து நிரப்பிய பாலிகைகளில் தூவி, அரங்கு போன்ற வெயில் படாத இடத்தில் வைத்து, நீரூற்றி, ஒன்பதாம் நாள் வளர்ச்சியை பார்த்து விதை சோதனையிட்டு பத்தாம் நாளில் ஆற்றில் கரைப்பது தான், முளைப்பாரி என்று பின்னால் பெயர் பெற்ற அங்குரம். 

இந்திரனை தெய்வமாக வழிபடும் மருதநிலமாகிய நாஞ்சில் நாட்டில் இவ்விழா முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்திருக்க வேண்டும். 12 பிடாகைக்காரர்களும் ஒன்று கூடி நடத்திட்ட விழா இது. திருவஞ்சி நல்லூர் முருகனும், கோட்டாறு பிள்ளையாரும் குமாரர் கோவில் முருகன் என முக்கிய மூன்று வருவாய் வட்டங்கள் இங்கே சங்கமிக்கின்றன. விளைச்சலின் வரி கணக்கு பார்த்தல் என்பது, இத்திருத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று. இந்திரனுக்கே மெய் சோதனை நிகழ்த்தப்படும் இடம். வரிகணக்கு பார்த்தல் இத்திருவிழா அங்கத்தில் ஒன்றாக இருந்ததாக கோவில் ஆவணங்கள் கூறியவை. 

இந்தகைய இந்திரன் கோவிலில் அங்குரம் நடக்கும் நிகழ்வு யாதெனின்,

முதல் நாள் திருவிழாவில் நடக்கிறது. 36 பாலிகைகளில் நவதானியங்கள் விளைய வைத்து திருவாதிரை ஆரட்டின் போது நீரில் கரைப்பதாக சொல்லி 36 பாலிகைகளும் சபாபதி சன்னதியில் உள்ள தனிப் பெட்டியில் வைத்து இருக்கிறார்கள். 36 பாலிகைகளிலும் மண் நிரப்பப்பட்டிருந்தது. 36 பாலிகைக்கும் நீர் நிரப்பிய மூன்று குடங்கள். 36 கணக்கு எதுவென தெரியவில்லை. கோவிலின் வழக்கமான சாயரட்சை பூஜை முடிந்ததும், ஒரு மிருதங்கம் ஒரு நாதஸ்வரம் ஒரு தீச்சட்டி, ஒரு ஆர்வலர் உடன் செல்ல ஒற்றைத் தமிழ் பிராமணன் ஒரே ஒரு துணியால் மூடப்பட்ட ஒரேஒரு தாம்பாளம் கொண்டு ஆற்றில் மண்ணெடுக்க செல்கிறார். ஏற்கனவே மண் நிரப்பப்பட்ட பாளிகைகள் நடராஜர் சன்னதியில் இருக்க. அங்கு தான் நடராஜர் உமையம்மை மாணிக்கவாசகர், அப்பர், சந்திரசேகரர் ஶ்ரிகௌரி என அனைத்து விக்கிரகங்கள் மௌன சாட்சிகளாக வீற்றிருக்கிறது. யாருக்கும் அறியப்படாத அளவில் வெறும் சடங்கா5க மட்டும் நிகழும் இவ்விழா ஒன்றாம் திருநாளின் மக்களோடு நிகழும் முக்கியப் பங்களிப்பாக மாற வேண்டும். மண்ணின் விழா மக்களின் விழா இது. 


சுசீந்திரம் திருவிழா பதிவு 5
   Muthuswamy Mahadevan..

பூம்பந்தற் வாகனம்.

இரண்டாம் நாள் விழாவில் காலை மாலை என இரு வேளைகளிலும் சிவிந்தை பெருமாள் ஆகிய சிவனும் உமாதேவியின் உற்சவ சிலைகள் வீதி வலம் வருகின்றன. காலையில் நின்ற கோலத்தில் சந்திரசேகரர் ஶ்ரீகௌரி வருவதாகவும், மாலையில் சிவனும் அம்மையும் வருவதாகவும் தற்போதைய கோவில் குறிப்புகள் கூறுகின்றன. மூல உற்சவர் அமர்ந்த கோலத்தில், சந்திரசேகரர் நின்ற கோலத்தில் வலம் வருகிறார்கள். நின்ற கோலத்தில் வருவதை குரு தரிசனம் என்றும், மாலையில் சிவதரிசனம் என்பதும் KK PILLAI குறிப்பு.

மரத்தினால் ஆன அடிச்சட்ட சப்பரத்தில், விதானம் உட்பட வாகனமே பூக்களின் அலங்காரத்தில் வருவதால் பூம்பந்தல் வாகனம் என சிறப்பு பெறுகிறது.

பூம்பந்தல் குறித்த மா. சிதம்பர குற்றாலம் பிள்ளை எழுதிய சுசீந்தை மான்மீய பாடல், 

"தேனுலா மலர்ச் சோலை சூழ்ந்திருந்த 
தென் சுசிந்தையின் வந்தொளிர் 
வானுளாவிய சோதி யாமென
மகிழ்விழா இரண்டின் இராவினிற் 
கானுலாவிய பன்மலர்த் தொடை 
கவினுற புனை பந்தரின் 
மானுலாம் விழிமாது சேரிறை 
வையம் உய்ய வந்து அருள்வானே."

சுசீந்திரம் திருவிழா பதிவு - 6
         Muthuswamy mahadevan.

3-ம்‌ திருநாட்‌ காலை பூம்பந்தற் பவனி, 

"திருவாழு மார்பனொடு 
திகழ் தேவதேவன்  
சிவதாணு நாதனெனும்‌ தென் சுசீந்தை ஈசன்‌ 
பெருவாழ்வு பெற்று
உலகம் உய்யவரும்
சக்தி பிரியாமல் உடனுறையப்‌ பெருமானை 
முகனும்‌ 
முருகாருங்‌ 
கடப்பமணி முருகேசன் அவனும்‌ 
முன்னேக 
முன்னூற்று நங்கையொடு சைவத்‌ 
திருவாசகப் பெருமான்‌ பின்னாக மூன்றாம் திருநாளிற்
பூம்பந்தர்‌ திகழ 
எழுந்தருள்வான்‌."

சுசீந்தை மான்மியம் எனும் நூலில் செய்யுள் நடையில் உள்ளது. இதற்கு கவிமணி மெய்ப்பு பார்த்து சாற்றுக் கவி அளித்துள்ளார். 

பூம்பந்தற் வாகனம் காலையில் வருவது, சக்தி உடன்வர காலையில் முகன் முருகன் முருகேசன் முன்னே செல்ல பின்னே காளியும் மாணிக்கவாசகரும் செல்வதாக எழுதி உள்ளார். இரவினில் கர்பகத்தரு வாகனம். அதற்கும் செய்யுள் எழுதி உள்ளார். அழகான அச்செய்யுள் இறுதியில் குறிப்பிட்டு உள்ளேன்.

ஆனால் KK பிள்ளை புத்தகத்தில் இரவினி்ல் மக்கமார் சந்திப்பு நிகழ்வதாக எழுதியுள்ளார். 1955 நிகழ்ச்சி நிரலும் இரவிலேயே குறிக்கிறது.
மக்கள்மார் சந்திப்பின் சிறப்பு கற்பகத்தரு வாகனம். 

நினைத்ததை எல்லாம் கொடுக்கும் சக்தி தேவலோகத்தில் இருக்கும் கற்பகத் தருவுக்கு உண்டு. அதையே சிவனும் பார்வதியும் கொண்டு வந்து மக்களுக்கு அருள்வதாக நம்பிக்கை. நாஞ்சில் நாட்டில் புதுமண தம்பதிகள் முதல் மாக்கள்மார் சந்திப்பு பார்க்கும் வழக்கம் இன்றும் உள்ளது. அவர்கள் அமைக்கும் புது வாழ்க்கைக்கு நினைத்ததை கொடுக்கும் கற்ப்பகத் தருவை, சிவனின் குடும்ப சகிதம் சூழ கண்டு திரும்புவது வாழ்வு சிறக்கும் என்கிற நம்பிக்கையில். பெரும்பாலும் முகூர்த்த பட்டாடை கட்டியே வரும் வழக்கம் தொடர்கிறது. தேர் பார்க்கவும் இதே போன்று வருகிறார்கள். தேர் பார்த்த பின்னே கடல் பார்க்கும் வழக்கமும் இன்றும் தொடர்கிறது. 
மக்கள்மார் சந்திப்பு நாளை (06-01-2025) இரவு பத்து மணிக்கு மேல் நடக்கிறது.

இரவின் நிகழ்வாக சுசீந்திரம் மான்மியத்தில் வரும் செய்யுள்.

மாலையிற்‌ கற்பகத்தருப்‌ பவனி, 

"ஈன்று ஆளும்‌ பெருமானே போற்றி என்றும்‌  
எம்பவநோய்‌ தீர்த்தருளும்‌ இறைவா 
என்றும்‌ 
வான் தோன்றும்‌ அமரரொடு முனிவரேத்தி 
மலர்மாரி பொழிந்திட,
இப்புவியோர்‌ வாழ்த்த 
தேன் தோன்றும்‌ 
கற்பக மாத்‌தரு 
மீதேறித்‌ தென் சுசீந்தை அண்ணல் வரும் திருவிழாவாம்‌ 
மூன்றாகும்‌ நாளிரவின்‌ காட்சி தன்னை 
மூவுலகின்‌ யாவர்தாம்‌ மொழியவல்லார்‌."


சுசீந்திரம் திருவிழா பதிவு - 7
        Muthuswamy mahadevan.

நந்தனாருக்கு அருளிய 
பஞ்ச(ம)மூர்த்தி தரிசனம்..

பஞ்சமூர்த்தி தரிசனம். 90களில் இருந்து ஞாபகம். நடுத்தெரு வீரமார்த்தண்டன் கோவில் முன்பு, காலையில் ரிஷபத்தில் அம்மை உடனுறை சிவனும் அன்னத்தில் அறம் வளர்த்தாளும், கருட வாகனத்தில் விஷ்ணுவும் வருகிறார்கள். வந்து நிற்கவும் கருடன் வலம்வரும் நிகழ்வு. கருடனாக வருவது யார்? சில ஆண்டுகளில் வராமலும் போனது உண்டு. காக்கை வந்தாலே கைதட்டி விரட்டிவிடும் அளவுக்கு முன்னேறி விட்டோம். கருடன் வலம்வரும் போது ஊளையிட்டும் பக்தியை வெளிப்படுத்துவது உண்டு. குரவையின் ஒலி விண்ணை தொடும் காலமும் இருந்தது. ஆனாலும் கருடன் வராத ஒரு ஆண்டில் மறைந்து போன அன்பு தாத்தா ஒருவர், வெற்றிலையை குதப்பிக் கொண்டு சொன்னது இன்னும் நினைவில் இருக்கு, 
"வாகனம் வரும் போது, நடுத்தெரு முழுமைக்கும் தீவட்டி நிற்கும், தீயின் வெம்மை மேலே எழ, மார்கழிக் குளிருக்கு மரப் பொந்தின் கதகதப்பில் இருக்கும் வெப்ப மண்டல பறவை கருடன் வெளியே வரும். சாமியே வந்தழைத்தாலும் தீவட்டிக்கு தான் பறவை வரும். ஒன்னும் ரெண்டும் வட்டியை வைச்சிட்டு வா வான்னா, வாயில்லா ஜீவன் அதுக்கு என்ன தெரியும்?" 
அதிக தீவட்டிகள் ஏந்தி வந்தது இத்திருநாளுக்கே. 
அத்தனை தீவட்டி எதுக்கு, கருடனை அழைக்கவா? நந்தனை சோதிக்கவா?

சேக்கிழாரின் பெரிய புராணம் வழி அறிந்த நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் வரலாறு ஒன்றுள்ளது.

கொள்ளிடம் கரையில் ஆதனூரில் பிறந்த நந்தனார், திருப்புன்கூர் 
சன்னதிக்கு வெளியே மெய்மறந்து பண் இசைத்து சிவனை பாடி நிற்கிறார். பிறப்பின் அடிப்படையில் அவரை கோவிலின் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். வெளியே நிற்கும் நந்தனாருக்கும் உள்ளே இருக்கும் சிவனுக்கும் இடையே மறைக்கிறது நந்தி. பக்தனுக்கு இறங்கிய பரமசிவன், கல் நந்தியை விலக்கி நந்தனுக்காக தன்னை வெளியே தரிசனம் செய்கிறார். 

அதன் பின்னர் தில்லை நடராஜரை காண செல்கிறார் நந்தனார். தில்லையெங்கும் அந்தணர். ஆடலின் அரசனைக் காண வேண்டும் அடியார்க்கு. அடியராக இருந்தாலும், புலையரை உள்ளே விட்டுப் பார்ப்பார்களா பார்ப்பனர்கள் எனும் காலம். சிதம்பரத்தை சுற்றி வேள்விப் புகை கண் அயர்ந்த நந்தனாருக்கு கனவில் தோன்றிய சிவன், நாளைப்போ!! என்கிறார். விடிந்ததும் எழுந்து அக்னியில் இறங்கி உள்ளே செல்கிறார் நந்தனார். தில்லைவாழ் திகைத்து நின்ற மூவாயிரம் பிராமணர்களும் கை தொழுது நிற்கிறார்கள். நாளைப் போ என்ற சிவனின் கட்டளைக்கு தன்னை தீயில் இறக்கிய நந்தனார் "திருநாளைப் போவார் " என அழைக்கப் பட்டார். அக்னியில் தங்களை நிரூபித்துக் கொண்டவர்கள், சீதையும் நந்தனாரும். அதையொட்டியே நடந்தது சுசீந்திரம் பிரத்யாயம் என்று அழைக்கப்படும் #கைமுக்கும். 

நந்தனாருக்கு பஞ்சமூர்த்தியாக காட்சி கொடுத்த ஆடலரசன், நந்தனாருக்காக தன்னையே வெளியே கொண்டு வந்த பஞ்சமூர்த்தி தரிசனமே ஐந்தாம் நாள் காலையில் நடக்கிறது. 

இது சிதம்பத்திலும் நடவாதது
நந்தநாருக்கு காட்சிக் கொடுத்த சிதம்பரத்தின் கனகசபை ஆடலரசன் கோவிலில் ஐந்தாம் திருவிழாவில் "தெருஅடைச்சான்" எனும் பெயரில் ரிஷப வாகனத்தில் சிவனும் பிற தெய்வங்களும் சேர்ந்து, சாமி ஊர்வலமாக தெருவை அடைத்துக் கொண்டு வருகிறது. ஒரே நாளில் கொடியேறறத்துடன் தொடங்கி, ஒரே நாளில் முடியும் இரு கோவில்கள் திருவிழாவிலும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஒரே வாகனத்தில் வருகிறார் சிவன். 
ஐந்தில் நந்தி, ஆறில் பூதகணம், ஏழில் கைலாசபர்வதம் என இரு இடங்களிலும் வேறுவேறு இல்லை. சிதம்பரத்தில் காணும் திருவிழாவிற்கு ஒப்பானது சுசீந்திரம் திருவிழாவும். 

இந்த நந்தனார் தரிசனத்தை உறுதி செய்கிறார் கோலப்ப கனகசபாபதி எனும் KK பிள்ளை. (பார்க்க the suchindrum temple பக்கம் 222). உச பூஜைக்கு பின்னர் வாகனம் புறப்படுவதாகவும், உஷ பூஜை நந்தனாருக்கு சிவன் காட்சி கொடுத்ததை கொண்டாடுவதாகவும் கூறுகிறார். 

அதேபோல, சிதம்பர குற்றாலம் பிள்ளை அவர்கள் எழுதிய சிசீந்தை மான்மியத்தில் பக்கம் 111இல், கீழ்வரும் பாடலும் குறிக்கிறது.

"மா தவத்தோர்கள் எல்லாம், மலரடி போற்றி நின்று,
சீத நன்னறு நீர் தூவச் 
சீர்மலி விழாவோர் ஐந்தில்‌ 
ஆதியான்‌ காலைப்‌ போதின்‌ அறவிடை மீது தோன்றி 
காதல் நந்‌தனுக்காய்‌ தென்பாற்‌ காட்சி தந்து அருளுவானே..."

அறவிடை என்பது நந்தி. ஆதியான் காலையில் காதல் நந்தனுக்காய் தென் பாற் காட்சி தருவதை குறிக்கிறார். ஆக இத்திருவிழா பெரிய புராண நிகழ்த்துக் கலையாக இங்கு நடந்திருக்கிறது.
கருடதரிசனம் என அழைப்பிதழில் போடுவது எல்லாம் தற்கால வழக்கம். கருட தரிசன கதைகள் எங்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று குறிப்புகளிலோ அழைப்பிதழிலோ கூட இல்லை.


சுசீந்திரம் திருவிழா பதிவு - 8
        Muthuswamy mahadevan 

வேடிக்கைகள் நிறைந்த ஆறாம் திருவிழா.

நந்தனாருக்கு காட்சி கொடுத்த, பஞ்ச மூர்த்தி தரிசனம், பக்தி மயமான நிகழ்வாக நடந்தது. அதே போன்று பெரிய புராண கதைகளில் சில ஆறாம் நாள் திருவிழாவில் நடந்திருக்கிறது. தற்போது பல மாற்றங்கள் நிகழ்ந்து நிகழ்வுகள் எளிமையாக்கப்பட்டு விட்டாலும் கூட, நூறு வருடங்களுக்கு முன்புவரை, உணர்வு மயமான வேடிக்கை மயமான மற்றும் வன்முறை முடிவுகள் கலந்தஆன்மீக கதைகளை கலை நிகழ்ச்சிகளாக உற்சவரை வைத்து நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். அதற்காக அன்று சமயக்குரவர்களான சம்பந்தர் சுந்தரர் நாவுக்கரசர் மாணிக்கவாசகர் நான்கு பேரும் திருவிழாவில் பங்கு எடுக்கிறார்கள்.
அதில் மூன்று நிகழ்வு: 

1. சம்பந்தருக்கு ஞான பால் கொடுத்த திருமுலைப்பால். 

திருமுலைப்பால் நிகழ்வும், தூது சென்ற நிகழ்வும் காலை வேளையில் நிகழ்ந்திருக்கிறது. சிவன் பார்வதி மற்றும் நான்கு சமய குரவர்களின் உற்சவமும் கோவிலின் வாசலில் உள்ள நாடகசாலையில் கொண்டு வைத்திருக்கும் போது இந்த புராணக்கதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். நாடகசாலை என்பது கோவில் வாசலில் இருந்து கோபுர வாசல் வரை இருக்கும் நீளஉயரமான மண்டபம். இம்மண்டபத்தை சுசீந்தரத்தில் வசித்த தேவரடியார் பெண்கள் கட்டிக் கொடுத்து இருக்கிறார்கள். சிறுவனாக அழுது கொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு பார்வதி ஞானப்பால் கொடுத்ததாகவும் "தோடுடைய செவியன் விடையேறியோர்....
" என தொடங்கும் பாடலை பாடியதாக உள்ளது. இன்றும் இங்குள்ள சைவப்பிள்ளை வகுப்பை சார்ந்தவர்கள் நிகழ்த்துகிறார்கள். கோவிலில் இருந்து பால் கொடுக்கப்படுகிறது. இவர்கள் பாடல்கள் அடங்கிய சுவடிகளை கொடுப்பதாக ஐதீகம்.

2. சுந்தரமூர்த்தி நாயனாருக்காக , பரவைநாச்சியாரிடம் தூது சென்ற சிவன் வாழைத்தாரின் நார்ப்பட்டையால் அடி வாங்கும் நிகழ்வு. 

ஆரூரான் எனும் இயற்பெயர் கொண்ட இவரின் அழகிற்காக சிவபெருமான் சுந்தரர் என அழைத்தத்தாக நம்பப்படுகிறது. சிறுவயதில் நரசிங்கமுனையர் எனும் மன்னனால் தத்தெடுக்கப்பட்டு இளவரசர் போல் இருந்ததாக கூறப்படுகிறது. இவரின் உற்சவம் இளவரசன் தோரணையில் இருக்கும். இவரின் விருப்பத்திற்காக சிவபெருமான் பரவைநாச்சியார் எனும் பதியிலார் சமூகத்து பெண்ணிடம் தூது சென்றதாகவும், வந்திருப்பது இறைவன் என்று தெரிந்து கொண்ட அச்சமுகத்து பெண்கள் அவரை வாழைநார் மட்டையால் அடித்து விரட்டி விளையாடியதாகவும் பெரிய புராணத்து கதைகள் கூறுகிறது. தெற்குதெரு பேரம்பலத்தை சுற்றி இந்த விளையாட்டுகள் நிகழ்ந்து இருக்கிறது. இது சுசீந்திரத்தில் வசித்த தேவரடியார்கள் (பதியிலார்) நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு ஆண்களால் தொடரப்பட்டிருக்கிறது. இப்பொழுது நிகழ்ந்ததாக தெரியவில்லை. 

3. திருநாவுக்கரசரிடம் வாதத்தில் தோற்ற சமணர்களை கழுவேற்றும் நிகழ்வு.

இது அன்று இரவு தெற்கு தெரு பேரம்பலத்தில் நிகழ்ந்து இருக்கிறது. சமணர்களுக்கும் அத்வைதிகளான சைவர்களுக்கும் நிகழ்ந்த சமயப்போர். இரு தரப்பினரும் தங்கள் தெய்வீகத்தால் எழுந்த உள்ளுணர்வை கட்டுரைகளாக தொகுத்து குடங்களில் இட வேண்டும். தோற்பவர்களை கழுமரத்தில் ஏற்ற வேண்டும். திருநாவுக்கரசருக்காக இறைவனே இறங்கி வந்து அவரை வெற்றி பெற செய்து சமணர்களை கழுவேற்றியதாக நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது. இதற்காக பேரம்பலம் அருகே கழுமரம் இருந்திருக்கிறது. பேரம்பலத்தின் கிழக்கு பக்கம் இருக்கும் பெரிய மண்டபத்தின் பெயர் கழுவேற்று மண்டபம். இந்நிகழ்ச்சியை இங்கிருக்கும் வைராவி சமூகத்தினர் நிகழ்த்தி இருக்கிறார்கள். கழுவேற்றிய பின் அதன் தடயங்களை சிவபெருமானிடம் காண்பித்த பிறகு அவர் அவ்விடத்தை விட்டு செல்கிறார்.

திருவிழா குறித்த தகவல்கள் KK PILLAI அவர்களின் THE SUCHINDRUM TEMPLE எனும் புத்தகத்தில் உள்ளது.


சுசீந்திரம் திருவிழா பதிவு - 9
    - Muthuswamy mahadevan 

பொற்சிவிகை வலமும், திருச்சாந்து சூடலும், கைலாயமலையில் அமர்ந்து வரும் வெற்றி ஊர்வலமும்.

தெய்வங்களும் புலவர்களும் சாய்ந்த நிலையில் ஓய்வெடுத்தபடியே ஏழாம் நாள் காலையில் பல்லக்குகளின் வலம் வருகிறார்கள். மொத்தம் பன்னிரு பல்லக்குகள். ஓய்வு நிலையில் உற்சவர்கள் பொற்சிவிகையில் வருவதாக கூறப்பட்டுள்ளது. பொற்சிவிகை என்பது உண்மையில் பொன்னா அல்லது உயர்வு நவிற்சியா என அறிகிலேன். ஆனால் வெள்ளிப் பல்லக்குக்கு குறிப்புகள் உள்ளன. இப்போது வருவன பட்டாடை பல்லக்குகள். முதன்முறையாக ஒரு அதிகாலையில் சூரியக் கதிர்கள் பரந்துவிழ, பட்டாடைகள் காற்றில் பறந்து படபடக்க, வரிசைகட்டி நின்ற பல்லக்குகள் கண்டு கீழத்தெரு சர்க்கஸ் மூலையில் மெய்மறந்து நின்றது இன்றும் நினைவில் உள்ளது. அக்காலத்தில் மொபைலோ கேமராவோ இல்லை படம்பிடிக்க. மெய்மறக்க வழி உண்டு. வெய்யோன் விழவும் வழி உண்டு. உயர்ந்த கட்டிடங்களும் இல்லாத காலம்.

பாரிசைவர்கள், பட்டர்கள், சைவப் பிள்ளைகள் ஆகியோருக்கு ஆறாம் திருவிழாவுக்கு பிறகு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை இந்த ஓய்வெடுக்கும் நிலை சாமியை இளைப்பாற செய்வதாகும். முந்தைய நாள் சமணர்களுடனான வாதப் போரில் சோர்ந்து போன உற்சவர்களை சயனநிலையில் கொண்டு வருகிறார்கள்.

மாலையில் காட்சிகள் மாறுகின்றன நடராஜருக்கு திருச்சாந்து சூடும் நிகழ்வு நடக்கிறது.
இது நடராஜரின் நெற்றியில் சாந்து பூசும் நிகழ்வு. தாருகன் எனும் அரக்கனை அழிக்க, முப்புரம் எரித்த வெற்றிக்கு பிறகு சிவனின் வெற்றியை குறிக்கும் நிகழ்வு. 

தாருகனை அழிக்க சிவன் சப்தகன்னியர்களை ஒவ்வொருவராக அனுப்பியதாகவும், அவர்கள் தோற்கவே சிவனின் நெற்றியில் இருந்து எழுந்த வெம்மையில் இருந்து காளி தோன்றி அசுரனை அழித்ததாகவும், தென் திருவிதாங்கூர் நாட்டார் வழக்காற்றியல் கதைகள் பரவிக் கிடக்கின்றன. சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டியானும் தாருகன் என்கிற கதை ஒப்புமையும் உண்டு. "அறுவர்க்கு இளைய நங்கை சூர்உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்....."  
என கண்ணகியை இளங்கோ பாடுகிறார்.
 
இதற்கு ஏற்றாற்போல் திருவிழா முடிவது மௌன பலி ஊர்வலம் செண்டை ஆழ்மௌனத்தை இடைவெளியில் ஒலித்துச் சொல்ல, இரண்டு முறை கோவில் பிரகாரத்தையும் ஒரு முறை ரதாவீதியையும் சுற்றி வந்து இறுதியாக முன்னூற்று நங்கை எனும் காளி கோவிலுக்குள் சென்று முடிகிறது. அங்கு அன்றொரு நாள் மட்டும் சிவனின் பிரதிநிதியாக வந்து வட்டப்பள்ளி மட ஸ்தானிகர் பூஜை செய்கிறார். திருவிழா நிறைவுற்று கொடி இறக்கப் படுகிறது. 

நெற்றியில் எழும் வெம்மைக்கு சாந்து வைத்து சாந்தப் படுத்தியதாகவும் கருதுகோள் உண்டு. 
அந்த ஆடலரசனை வெற்றியை ஊருக்கு சொல்லும் விதமாக இரண்டு முறை எடுத்து வருகிறார்கள். மேருமலை இருக்கும் கைலாயமலையை சிவபக்தன் ஆகிய இராவணன் சுமந்து வர இரவில் ஒரு முறை வருகிறார், அதிகாலை இன்னொரு முறை. இரவில் பேரம்பலம் முன்பு அதிக அளவில் மக்கள்கூட நடராஜ ரூபமாக கண்டு அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் நிகழ்வு இன்று வரையிலும் நடக்கிறது. அதனால் தான் ஏழாம் திருவிழா மற்ற எல்லா திருவிழாவிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் பேரம்பல தீபாதரனைக்காக மக்கள் காத்துக் கிடந்து தரிசிக்கிரார்கள். 
வெற்றியில் ஆனந்த களிப்பு துள்ள தாண்டவ மூர்த்தியாக எட்டாம் நாள் அதிகாலை திருநடனம் மற்றொன்று.

சுசீந்திரம் கைலாச பர்வத வாகனம் தென்னிந்தியா முழுமைக்கும் புகழ்பெற்ற வாகனம். வெள்ளியால் செதுக்கப்பட்ட வாகனங்களில் முந்தியது. 1905 இல் ரிஷப வாகனங்கள் அன்னம் கருடன் குண்டோதரன் வாகனங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அவை கோவிலோடு மரபு வழி ஆசாரியான சாத்தையன் ஆசாரி குடும்பத்தாரால் செய்யப்பட்டது. ஆனால் கைலாசபர்வத வாகனம், 1874 இல் பத்மநாபபுரம் அரண்மனையில் வைத்து, திருவனந்தரம் மற்றும் ஆரன்முளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிககளால் செய்யப்பட்டு கோவிலில் உள்ள பாதுகாப்பு வீரர்களால் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. சுசீந்திரம் கோவிலுக்கு ஒழுங்கமைக்கப் படாத பாதுகாப்பு நிலையங்களாக ஈத்தங்காடு, மைலாடி மற்றும் காக்குமூர் மூன்று நிலைகளில் பாதுகாப்பு வீரர்கள் இருந்துள்ளனர்.


சுசீந்திரம் திருவிழா பதிவு - 10
Muthuswamy mahadevan 

தேர்த் திருவிழா.

இந்திரன் வழிகாட்ட தேரில் சாமி வருகிறார். 1740க்கு முன்பு வரை அம்மன் தேராக இருந்ததை தான் இப்போது சாமித் தேராக இழுத்துக் கொண்டிருக்கிறோம். அம்மன் தேரே இப்படி என்றால், சாமித்தேர் எப்படி இருந்திருக்கும்? ரதவீதிகள் எவ்வாறு இருந்து இருக்கும். 1758 வரை ஆண்ட மார்த்தாண்ட வர்மா காலம் வரை ரத வீதிகள் எங்கும் வீடுகளோ குடியிருப்புகளோ இருந்தது இல்லை. திருக்கண் சார்த்து மண்டபங்களும் மடங்களும் கோவில்களும், அங்கு தான் மண்டகப்படியும், திருச்சாத்தும். நாயக்கர் காலத்தில் தான் செச்சே கொட்டாரம் கட்டப்பட்டு உள்ளது. ரதவீதிகள் விரிவு படுத்தபட்டுள்ளது. அதற்கும் முன்னே விட்டலேசர் காலத்தில் தேர்கள் வந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது. 1544 கிருஷ்ண ஜெயந்தி அன்று அவர்கள் தான் கோபுர வாசல் அடிஸ்தானத்தையும் பிரமாண்டமாக காட்டுகிறார்கள். 

சந்தா சாஹிப் படையெடுத்து வந்த போது, மூலஸ்தானத்தில் சுவரால் மறைத்து நகைகளை பாதுகாத்து உள்ளார்கள். அவரால் எரிக்கப்பட்ட சாமித்தேருக்கு பதில் கட்டிய தேர், இப்போது அம்மன் தேராக உள்ளது. அன்றைய அம்மன் தேர் சாமித்தேர் ஆகியுள்ளது.

60 அடி உயர இப்போதைய சாமித் தேர் கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டது. தேரில், உபபீடம், அடிஸ்தானம், நாடகம், தேவாசனம் மற்றும் சிம்மாசனம் எனும் ஐந்து அடுக்குகள். இரு துவாரபாலகர்கள், அவர்களின் அருகே பாயும் வடிவில் இரு குதிரைகள். கடிவாளம் இருப்பது பிரம்மா கையில். ஐந்து அடுக்குகளின் முகங்களிலும் அலங்கரிக்கப்பட்ட விளிம்பு பட்டைகள். அவற்றில் புராண கருப் பொருளை உள்ளடக்கிய தெய்வ சிற்பங்கள். எண்ணற்ற சிற்றின்ப வகையை சார்ந்த பாலியல் விளக்க சிற்பங்கள். 

"இந்துமதம் பாலியல் கலைகளை, ஆபாசமாக எண்ணுவது இல்லை. இந்துக்களின் எல்லா செயலிலும் மதம் கலந்து இருக்கிறது. அவர்களால் அதை பிரித்து வைக்க முடியாது. ஒவ்வொரு உடல் இயக்கத்திற்கும் மதத்தின் முக்கியத்துவம் இருக்கிறது.". என்கிறார் மதுரை டெம்பிள் சிட்டியை எழுதிய ஆங்கிலேய ஐசிஎஸ் அதிகாரியான லாஸ்ரடோ ஷெனாய்.

மலையாள தந்திரி , யோகக்காரர் , ஸ்தானிகர் அதிகாரம் பெற்றிருந்தும் கேரளாவின் மற்ற பகுதிகள் போல் மாற்றம் அடையாமல் இங்கு தமிழர் பகுதிகள் போல் தேரோட்டமும் மற்ற திருவிழாக்களும் நடைபெற காரணம், அவர்கள் பொறுப்புக்கு வரும்போது இதை மாற்றமாட்டோம் என்று உறுதிமொழி எடுப்பதாகவும் என்கிறார் KK PILLAI. இது 13 ஆம் நூற்றாண்டு வீர கேரள வர்மன், கோதை கேரள வர்மன் காலத்தில் தொடங்கி இருக்கலாம் என்று நம்புகிறார்.

திருவிதாங்கூர் மன்னர்கள் தேர் நிலைக்கு நின்ற பிறகே அன்றைய உணவு எடுத்துக் கொள்கிறார்கள். நிலைக்கு நின்ற தகவலை, அவர்களுக்கு வரிசையாக எழுப்பப்படும் வேட்டு சத்தம் அவர்களின் அரண்மனை வரை கொண்டு சேர்க்கப் படுகிறது. இதே வழக்கம் ஶ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் தேர் நிலைநின்ற செய்தி மதுரை வரை கொண்டு சேர்க்கப்பட்டது.

எட்டாம்திருநாள் மடம் (பிராமணர்களுக்கு), திருவாதிரை மடம், (பொதுமக்களுக்கு) திருவாடுதுறை, தருமபுரம், வட்டப்பள்ளி மற்றும் ஐயன் மடங்கள் போன்ற மடங்கள் கடந்த காலங்களில் பக்தர்களுக்கு திருவிழாக் காலங்களில் உணவு வழங்கி வந்தனர். இவை சுசீந்திரம் சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து உள்ளன. கோவில் திருவிழாவில் மோரூற்ற நிலம் வழங்கிய கோவில் பதிவு குறிப்பு 1826 இல் உள்ளது.


சுசீந்திரம் திருவிழா பதிவு -11
   Muthuswamy mahadevan 

வழிபாட்டில் இருக்கும் வானியல் கூறுகளும் மூதிரை நன்னாளும்:

சுசீந்திரம் கோவிலில் 12 ஆம் நூற்றாண்டை சார்ந்தது திருவாதிரை நாயகன் ஆன சபாபதியின் விக்ரகம்.

சபாபதி என்றால், அவைத் தலைவன் அல்லது அவையின் நாயகன். வானியல் ரீதியாக பார்த்தால், 27 நட்சத்திரங்கள் கொண்ட சந்திர குடும்பத்தின் தலைவன். முன்னூற்று அறுபது டிகிரி கொண்ட பூமியை சந்திரன் ஒருமுறை சுற்ற 27 நாட்கள் ஆகின்றது. 27 நாட்களும் 27 நட்சத்திரங்கள் கணக்கு. 360 டிகிரியை 27 கொண்டு பிரித்தால் ஒரு நாளுக்கு சந்திரன்,13.33 பாகை அளவுக்கு சுற்றுகிறது. 27 நட்சத்திரமும் நான்கு பாதங்கள் வீதம் பிரிக்கப் பட்டுள்ளதால் மொத்தம் 108 பாதங்களாக பிரிக்கப் பட்டுள்ளது பூமியின் 360 டிகிரி.  

இன்று திருவாதிரை முழுநிலவு. தமிழ் மாதங்களில் இன்றிலிருந்து நேர் எதிர் ஆறு மாதங்களில் வரும் திருவாதிரை ஆனி மாத திருவாதிரை முழு அமாவாசை ஆகும். அதுபோல் ஆனியில் பூராடம் முழு நிளவு எனில் அது மார்கழியில் அமாவாசை. இப்படி நேர் எதிர் குணாதிசயம் உடைய நட்சத்திர குடும்பத்திற்கு மையம், நிலவு. நிலாவுக்கு பூமி. நிலவை சூடியவனும் பூமி தான். சந்திரசேகரனார் என்றொரு பெயர் சிவனுக்கு. சந்திரனை சேகரம் செய்தவன். அவன் இயக்கம் நடனத்தின் குறியீடு. தெற்கு நோக்கி அமர்ந்து கிழக்கிலும் மேற்கிலுமாக அவன் கால்கள் கைகளின் அசைவுகள். இயக்கம் எல்லாம். நிலையாக இருக்கும் சூரியனை மேற்கில் இருந்து கிழக்கு முகமாக சுற்றும் பூமி தெற்கு நோக்கி நின்று வணங்குவதே 

இந்திர விழா எனும் சூரிய வழிபாடு கொண்டாட்டங்களும் 27 என்கிற சந்திரனின் முழுச்சுற்று நாட்களில் நடந்து இருக்கிறது. திருவாதிரை என்பது முழுநிலவு. அன்று சந்திரனின் மீது முழுவதுமாக பகல். உச்சி வெயில் ஏறி நிற்கும் நிலவு தான் அன்று பூமிக்கு குளிரையும் அள்ளிக் கொடுக்கிறது. 

முத்தேவு (மூன்று தெய்வம்) என்பது முப்புரம், முப்பொழுதில் இருந்து உருவான குறியீட்டு வடிவங்களே. 

சூரியனை அடிப்படையாக கொண்டவர்களுக்கு ஜனவரி போல் சந்திரனை அடிப்படையாக கொண்டவர்களுக்கு மார்கழித் திருவாதிரை எனும் முழுநிலவு நாள். 

மேற்கத்திய நாடுகளில் இந்திய கலை மற்றும் புராண தத்துவங்களை கொண்டு சேர்த்த A.k. குமாரசாமி எனும் அறிஞர் நடராஜ தத்துவத்தில் இது அண்டத்தின் அசைவுக் குறியீடு, மாயையில் இருந்து அனைவரையும் விடுபட செய்வது மற்றும், பிரபஞ்சத்தின் மையம் தான் நடராஜரின் சிதம்பரம் என்கிறார். 

அந்த சிறப்பு மிக்க நாளுக்கு தான் இங்கே மார்கழி மாத திருவிழா. தெற்கு முகமாக இருக்கும், நடராஜரும், வடக்கு தெற்காக பள்ளிக் கொண்டு கிடக்கும் அமர புஜங்கனும் இங்குள்ள ஆதி தெய்வங்களே. இதே அமரபுஜங்கன் குறத்தியறையிலும் குடைவரை புடைப்பு சிற்பமாக தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறான். இந்த குறத்தியறை நாஞ்சில் நாட்டை ஆண்ட நாஞ்சில் குறவனின் தலைநகரமாக இருந்தது இருக்கிறது. 

தெற்கு முகமாக அமர்ந்து இருப்பவனின் திருவிழா, வடக்கு முகமாக வீற்றிருக்கும் காளியின் பூஜையோடு இன்று நிறைவு பெறுவது தனிச் சிறப்பு!

புகைப்படம் இன்று காலை திருவாதிரை முழு நிலவு.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அம்மையப்ப பிள்ளை

இசை