தெருத் திரை
நாகர்கோவிலில் இரண்டரை தியேட்டர்கள் இருக்கிறது. இரண்டு தியேட்டர்களில் நான்கு ஷோக்களும், மாலை இரவு மட்டும் ஒரு தியேட்டர் செயற்படுவதால் அது அரை தியேட்டர் ஆகிறது. பகல் காட்சிக்கு வெளியே இருக்கும் வெளிச்சத்தில் திரைக் காட்சிகள் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் இந்த நல்ல முடிவு எடுத்து இருக்கலாம். தெருக்களில் திரைகட்டி சினிமா போட்ட காலங்களில், தெருவிளக்குகளை மறைக்க, ஆப்பரேட்டரோடு வரும் உதவி ஆள் கோணி சாக்குகளை கொண்டு மின்கம்பத்தில் ஏறி எரியும் விளக்குகளை சுற்றி மூடுவர். மரத்தால் ஆன மின்கம்பங்கள் இருந்தது, முன்னதாக காலையிலேயே கடப்பாரையால் இரண்டு குழிதோண்டி கம்புகள் அல்லது கம்பிகள் இரண்டு ஓரங்களுக்கு ஒன்று என நடுவார். கருக்கல் தாண்டி, சுற்றிக் கொண்டு வந்திருக்கும் திரைச் சீலையை விரித்து குறுக்கு கம்பியில் இணைத்து இரண்டு கம்புகளிலும் கட்டி விட்டால், அதன் பிறகு அத்தெருக்களில் சைக்கிள் நுழைய அனுமதி இல்ல. "திரை கட்டியாட்சு" என கயிறு வண்டிக்குள் ஏறிய வாண்டுப் பயணிகள் தெரு சுற்றி வந்து தகவல் அறைந்திருப்போம். அடுத்து குழல்வடிவ ஸ்பீக்கர்கள் இருபுறமும் கட்டியதும், "ஐ! ரேடியோ காட்டியாட்சு என வண்டி கிளம்பும்." புராஜக்டர் வந்ததும் "பெட்டி வந்தாட்சு" என்கிற குதுகுலத்தோடு கயிறு வண்டி வலம் வரும். மின்சாரம் இருக்கும் வீட்டருகே புராஜெக்டர் இருக்கும்படி தான் திரைகட்டி இருப்பார். லைப்ரரி மேஜை புரஜக்டர் வைக்கவும், பெஞ்ச் ஆபரேட்டருக்கும் இடம் மாறி இருக்கும். மின்சாரம் கொடுத்த வீட்டுக்காரர், பெஞ்சில் இடம் பிடித்து இருப்பார். பால்கனிக்கு சமமான இருக்கை அது. அதில் அவ்வளவு சீக்கிரம் இடம் கிடைக்காது. முதலில் ஒரு குண்டு பல்பு எரியும். அதன் பிறகு ஃபோகஸ் லைட் திரையில் ஒளிர விடப்பட்டு அட்ஜஸ்ட் செய்யப் படும். மேலிருந்து கீழ் இடமிருந்து வலம் என மாறி மாறி ஒருவழியாக லைட் சீட்டிங் ஆகும். அதன் பிறகே தெருவிளக்குகள் சுற்றி மூடப் படும். "கயிறு வண்டி தன் கடைசி டிரிப் புறப்படும், "லைட்டு அணைச்சாச்சு! படம் போடப் போறாங்க" என்று அறிவித்து விட்டு திரும்பி வந்து இடம் பிடித்து விடும். முழுநீளப் படத்திற்கும் வறுத்த புளியங்கொட்டை பிரதான ஸ்நாக்ஸ். பின்விளைவுகள் மறுநாள் நாறும் பள்ளி வகுப்பறைகள். ஏதாவது வீட்டில் இருந்து அவித்த கருப்புக்கடலையோ முறுக்கோ வரும். ஒரு ரீல் முடிந்து அடுத்த ரீல் மாற்றும் இடைவெளியில் வீட்டுக்குள் சென்று தண்ணீர் குடித்து விட்டு வரலாம். ஒரு சில திரில்லர் படங்களின் இடைவெளியில் பயத்தினால் தாகம் தீர்க்கப்படாமல், தெருவில் வதைவதை என்று கிடக்க வேண்டும்.
அந்த காலத்தில் கூட நாகர்கோவிலில் குறைந்தது 15 திரை அரங்குகள் செயற்பட்டு இருக்கும். அதுவே இப்போது இரண்டரை ஆகி விட்டது. அதில் இரு தியேட்டர்களில் நான்கு காட்சிகளும் கோட் ஓடுவதும் அரை தியேட்டரில் வாழை ஓடுகிறது. இரண்டும் ரெட் ஜெயன்ட் விநியோகம் தான். இனி இவர்களை மீறி "லப்பர் பந்து" போன்ற ஃபீல் குட் மூவி பார்க்க பழைய சிஸ்டம் கொண்டு வர வேண்டும் போலிருக்கு.
ரஜினி கமல் கார்த்திக் விஜயகாந்த் பிரபு மட்டுமல்ல சிவாஜிக்கு இன்றும் கூட ரசிக சிகாமணிகளை வைத்திருக்கும் நாரோயிலுக்கு வந்திருப்பது என்ன ஒரு சோதனை?
கருத்துகள்
கருத்துரையிடுக