பெண் குழந்தைகள் தின பதிவு
கல்லூரி ஒன்றின் விடுதியில் இருந்து மாணவிகள் ஊர் திரும்புகிறார்கள். கூட்டமற்ற பேருந்து ஒன்றின் இடதுபுற இருக்கைகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஜன்னலோரம் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் வலதுபுற இருக்கைகளிலும் அவர்களின் கைப்பைகள் இருக்கிறது. அவர்களின் உரையாடல் பேருந்தை உட்புறமாக கோர்த்துக் கொண்டு இருக்கிறது. ஒரு நீள் மின்கம்பியின் மீது அமர்ந்திருக்கும் பறவைகள் இசைவடிவமாதல் போன்று பேருந்தும் இசையோடு நகரத்திற்குள் நுழைகிறது.
நகரத்தின் பிரபல நகைக்கடை சீருடையோடு பேருந்தில் ஏறுகிறாள் இளம் பெண் ஒருத்தி. உடன் சிவப்புநிற வேட்டியும் ஓட்டுனரின் காக்கி சீருடையோடும் மகளை வேலையில் இருந்து அழைத்துச் செல்லும் தகப்பன். இருவரும் வலது புற சீட்டில் ஒன்றாக அமர்கிறார்கள். நகரத்தின் இன்னோரு மூலையில் இருக்கும் பேருந்து நிலையம் வரை மகள் பேசிக் கொண்டே வருகிறாள். 240 ரூபாய் பொருள் ஒன்றை 200 க்கு பேரம் பேசி வாங்கியதை தந்தை பெருமையாட கூறிக் கூறி குழந்தையாகிறாள். ஒரு வார்த்தையில் இருந்து இன்னொரு வார்த்தைக்கு இடைவெளி அற்று இறுக்கிப் பிடித்த மூச்சுகளால் கோர்த்துக் கொண்டிருக்கிறாள் அன்றைய நாளின் அனைத்து நிகழ்வுகளையும்.
ஒரு வேகமான தட்டச்சு இயந்திரத்தின் விசைக்கம்பி ஒலி, அழகிய விரல்களின் நடனத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது போல மனம் இலகுவாகி பறந்து கொண்டு இருக்கிறது.
"பெண்ணே என்னடி உண்மை சொல்லடி…
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்…"
என்ற முத்துக்குமாரின் உயிரை ஹரிஹரன் பாடி மீட்க பேருந்தின் இசைக்கருவிகள் உயிரோடு ஒலிக்கிறது.
கல்யாண்ஜி வரிகளை போல் அத்தனை அழகாக இருக்கிறது அவர் ஊரும் பெண் குழந்தைகளும்.
இனிய பெண்குழந்தைகள் தின வாழ்த்துகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக