சுசீந்திரம்
சுசீந்திரத்தில் கோபுரமாக எழுந்து நிற்பது காலங்காலமாக நாஞ்சில் பாசனபகுதிகளில் ஓடிப் பாய்ந்த மகேந்திரகிரி மலை வண்டல்.
மகேந்திரகிரி மலையின் வடமேற்கு எல்லையில் சுருளோடு எனும் இடத்தில் இருந்து உற்பத்தி ஆகும் பழையாறு தென்கிழக்காக பாய்ந்து மணக்குடி கழிமாரில் கடலில் கலக்கிறது. நாஞ்சில் நாட்டு பாசன தேவைக்கு அனந்தன் ஆறு புத்தனாறு என இரு கிளை ஆறுகள் வெட்டப்பட்டு உள்ளது. அனந்தன் ஆறு பழையாறின் மேற்கு கரை விவசாய பாசனத்திற்கு எனில், கிழக்குப் பகுதிக்கு புத்தன் ஆறு. இது பூதப்பாண்டி அருகே மண்ணடியில் இருந்து பிரிகிறது. இதற்கு அடுத்து வீரநாராயண மங்கலம் அருகே தேரைகால் வெட்டப்பட்டு திருப்பதிசாரம் வழியாக தத்தையார்குளம் சென்று சேர்கிறது. தத்தையார்குளத்தில் மேல் கீழ் நிரம்பி தேரூர் பெரியகுளம் பாயும் நீர் அடுத்தடுத்து குளங்களை நிரப்பி பழையாறில் சுசீந்திரம் கடந்து செங்கட்டிப் பாலம் அருகே சேர்கிறது.
மகேந்திரகிரியின் தாது வளமிக்க மணல் பழையாறு வழியாக சேர்ந்து தேரைகால் அதைக் கொண்டு வந்து தத்தையார் குளம் சேர்க்கிறது. தத்தையார் குளத்தின் வண்டல் விவசாய பூமிக்கு பெரிய வரப் பிரசாதமாக இருந்து இருக்கின்றது. அதுபோல அதன் குளக்கரையில் சேருகின்ற தொளிமண்ணும் உறுதியானதாக இருக்க, தேரைகால் புதூர் பகுதியில் மண்பாண்ட உற்பத்தி காலங்காலமாக சிறப்புடன் திகழ்ந்து இருக்கின்றது, அண்மை காலம் வரை.
"தேராப்பூர் சட்டியை தூக்கிட்டு தெருவோடு போ" என்பது வீட்டில் மூத்தோர் சொல் கேளாதவர்களை பிச்சை எடுக்க போ என சாபமிடும் நாஞ்சில் நாட்டு சொல் வழக்கம். திருப்பதிசாரம் விலக்கு பேருந்து நிறுத்தத்தின் பெயர் "ஓட்டாபீஸ்". அந்த குளக்கரை மண்ணை எடுத்து ஓடு தயாரிக்கும் தொழிற் சாலை அங்கு இருந்தது.
அதே தத்தையார் குளம் மண்ணெடுத்து வார்க்கப்பட்ட செங்கல் மட்டுமே சுசீந்திரம் கோவிலின் 133 அடி உயர கோபுரத்திற்கு பயன்படுத்தப் பட்டிருப்பதாக ஆய்வாளர் k.k. பிள்ளை குறிப்பிடுகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக