சுசீந்திரம்
பிரம்மரூப விநாயகர்:
மும்மூர்த்திகளான சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் காட்சிக் கொடுத்த இடம் சுசீந்திரம் என்பது அதன் தலவரலாறு. கல்வெட்டு அமைப்புகளின் படியும், கோவில் அமைந்திருக்கும் உயரத்தை பொறுத்தும், கைலாசநாதர் ஆரம்பகாலத்தில் இருந்ததாக கருத முடிகிறது. மரத்தின் கீழ் தெய்வத்தை வழிபடும் தொன்மையின் அடிப்படையில் கொன்றையடி நாதர் அடுத்த இடத்திற்கு வருகிறார். வடக்கேடம் தெற்கேடம் எனும் இரு பிரிவுகளாக இருக்கும் தற்போதைய மூலஸ்தனம் சிவன் விஷ்ணு இருவருக்கும் ஆனது. மண்டப அமைப்புகளின் படி இது அவ்விரு சன்னதிகளில் இருந்து காலத்தால் பின் தங்கியது.
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தனித் தனி சன்னதி இருக்க பிரம்மாவுக்கு எங்கே? கோவில் நுழைவாயில் சுதை சிற்பத்திலும் இல்லை, திருவிழா வாகனங்களிலும் இல்லை. பிரம்மா எங்கே இருக்கிறார்?
பிரம்மாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகள் கட்டப்படக் கூடாது என்பது புராதன நம்பிக்கை. லிங்க வழிபாட்டின் படி பிரம்மா ஒரு பாவமூர்த்தி. அவர் இருக்கும் இடத்தில் அவர் மற்ற தெய்வங்களின் உருவத்தை எடுத்துக் கொள்கிறார் என்பது நம்பிக்கை.
இங்கேயும் வடக்கேடம் சிவன் தெற்கேடம் விஷ்ணுவை வழிபட்டு நேர்பின்னால் வந்தால் மூடுகணபதி இருக்கிறார். மூடு என்பது இங்கு மறை என பொருள்படுகிறது. கணபதிக்குள் மறைந்து இருக்கும் தெய்வம் பிரம்மா ஆகிறார். கோவில் ஆவணங்கள் அவரை பிரம்மரூப விநாயகர் என்கிறது. விநாயகர் முன்பு எலி வாகனம் இருக்காது இங்கு . 12 ஆம் நூற்றாண்டிற்கு முந்திய தெய்வ சிலைகளில் வாகனங்கள் உடன் இருக்காது. இது அதற்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் சிலையின் தேய்ந்த வடிவம், காலத்தால் முன் தங்கியது என்பதையும் உரைக்கிறது. சிவன் விஷ்ணு சன்னதிகளோடு இந்த பிரம்மரூப விநாயகர் சன்னதி சேர்ந்து ஒரு முக்கோண வடிவை ஏற்படுத்துகிறது.
K. K. Pillai அவர்கள் நூலில் உள்ள தகவல்களில் இருந்து.
கருத்துகள்
கருத்துரையிடுக