கனிவும் உண்டு வாழைக்கு
கனிவும் உண்டு வாழைக்கு!
எண்பதுகளின் இறுதிகாலம். இரண்டு ரூபாய்க்கு அரை சாக்கு வாழைக்காய் கிடைக்கும். சுற்றத்தாருக்கு மட்டும் வியாபாரம் செய்வாள் பக்கத்து வீட்டு முத்தம்மை ஆச்சி. பெரும்பாலும் பாளையம்கோட்டை, ஐந்தாறு ரசக்கதலி, ஓரிரு மோரீஸ், சிங்கன், மொந்தன், தொழுவன், செந்தொழுவன், பேயன், பேயனில் சக்கைப்பேயனை விட நாட்டுப்பேயன் அதிகமிருக்கும் நாட்டுப் பேயனில், பழத்தை தின்றுவிட்டு தொலியில் இருக்கும் மெல்லிய உள்ளடுக்கு ஒன்றை இளக்கித் தின்னலாம். சிலர் தொலியின் உட்பக்கத்தை வாயில் வைத்து அப்படியே திம்பர். தூரத்தில் இருந்து பார்த்தால் , "இவன் ஏம்டே தொலியை திங்கிறான்?" என்றிருக்கும்.
இத்தனையும் கதம்பமாய் வாங்கிச் சென்று வீட்டில் வைத்திருந்தால் ஒவ்வொன்றாக பழுக்க ஆரம்பித்து விடும். பழுக்க பழுக்க தின்பது ஒன்றே அன்றைய ஸ்நாக்ஸ். அடிபட்டது ஒன்றிரண்டு, வெடிப்பு சில என்றிருக்கும் அருவாமனையில் கீறி போட்டுவிட்டு திங்க வேண்டியது தான்.
முதலில் பாளையங்கோட்டை மஞ்சள் நிறமடிக்கும். ஒருவித புளிப்புச் சுவையுடைய பழம். நோயெதிர்ப்பு சக்தி அதிகம் என்பார்கள். ஒரு காலத்தில் தின்னு தின்னு புளிச்சுப் போன பழம் அதுதான். ஆப்ப மாவு புளிக்க இந்தப்பழம் போட்டு மாவு அரைப்பார்கள். அப்பம் சுடும் போதும் மாவு பிசைய இந்தப்பழம தேவைப்படும். பெரும்பாலும் கடைகளில் அதிகம் இந்தக்குலை தான் கிடக்கும். விலைகுறைவு. இப்பொழுது இந்தவகை சீண்டுவார் அற்று அறுகிப் போனது.
மோரீசும், பேயனும் அதிகமாக பழுத்துவிட்டால் அழுகிவிடும். செந்துழுவனை விட வெள்ளைத் தொழுவனுக்கு ருசி அதிகம் இருந்தது. இப்போது தொழுவன்கள் மரபணு மாற்றப்பட்டு சிதைந்தே போனது. அப்பொழுது உள்ள ருசி இல்லை. கதலிக்கு என்று சிறப்பு அரை காய் பக்குவத்தில் கூட உரித்து தின்று விடலாம். நன்கு கனிந்தாலும் தேனாக இருக்கும். தொலியும் மெல்லிசாக உரிந்து வந்துவிடும். கைமுறுக்கும் சிங்கனும் சேர்த்து தின்பது ஒருவகை இணைந்த சுவையெனக்கு.
இத்தனையும் கிடைக்கும் அங்கே ஏத்தனும் மட்டியும் இருக்காது. மட்டி க்கு மதிப்பு அதிகம். ஏத்தன் எளிதில் உதிர்ந்து விடாது என்பதால் வராது.
வடசேரி முத்தமாச்சி அவர்களின் குடும்பத்திற்கு என்று வாழைத்தார்கள் உறையிடும் உறக்குழி ஒன்று உண்டு. உறக்குழி என்றால், அங்கே கனகமூலம் சந்தைக்கு மொத்தமாக இறங்கும் வாழைகளுக்கு அது ஒன்றே பெரிய உறக்குழி நிலையம். அங்கே உதிர்ந்து போன காய்கள் தான் மேலே சொன்னவை. வாரத்திற்கு இரண்டு நாள் நடக்கும் மூட்டமிடுதல்.
வழைப்பழங்களின் ருசியும் மணமும் முத்தமாச்சியின் அன்போடு இரண்டற கலந்த ஒன்று. கலர் கண்டாங்கியும், வெள்ளை நிற ரவிக்கையும் அணிந்திருப்பாள் எப்போதும். உழைத்து உரமேறிய தேகம். எல்லோரிடமும் காட்டும் அன்பும் வாஞ்சையும். "எட்டீ ஐயப்பன் வந்திருக்கான் என்பாள்." உள்ளே தனியாக எடுத்து வைத்திந்த மட்டியோ ஏத்தனோ பெரியம்மையோ சித்தியோ எடுத்து வருவார்கள். "இங்கிருந்து தின்னுல" என்பாள் . வெளியே கொண்டு போனால்"பராதி" வரும் என்பாள். மதிய நேரத்திற்கு சென்றால், சோறு வடித்த தண்ணீரை எடுத்து வெந்நீரில் கலந்து இரண்டு பரல் உப்பு போட்டு, அகப்பையின் கையணைய கலக்கி சுடச்சுட ரோட்டோவில் கொண்டு வந்து வைப்பாள். ரோட்டோவுக்குள் சுற்றும்
கஞ்சி வெள்ளம் சுற்றி நிற்கும் முன் அவள் சீலை முந்தியில் முடிந்து வைத்திருக்கும் இரண்டு மூன்று பழங்கள் முன்னிறுக்கும். "ரோபஸ்ட்ரா வந்தது புள்ளைக்கு என எடுத்து வைச்சேன்", "தின்னுட்டு தண்ணீ குடிச்சிட்டு போய் விளையாடு" என்பாள். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காலையில் புட்டு அவித்து வைத்துவிட்டு வருவார்கள், "புட்டுக்கு தானே இந்த கொண்டு போ" என பைசா வாங்குவதில்லை. வாங்கித் திரும்புபவர்களைக் கூப்பிட்டு, "இன்னா இதையும் வைச்சிக்க" என மேலும் ஒருசில பழங்கள் கொடுப்பார். திரும்பவும் கூப்பிடுவாள், இன்னும் இரண்டு என மீறிப் பாயும் கனிவு உண்டு ஆச்சியிடம். வாழைப்பழம் தின்னும் எந்த நாளேனும் அவள் முகம் நினைவுக்கு வராமல் இருந்தது இல்லை. அரிவெட்டியோ கடவமோ கோணியோ அவளைச் சுற்றி எப்போதும் நிறைந்து இருக்கும் கனிந்த அன்பு!
கருத்துகள்
கருத்துரையிடுக