புளிக்கறி

புளிக்கறி என்ற பெயரை நாஞ்சில் நாடு தாண்டிப் போய் சொன்னால் அது ஒரு அசைவ உணவா என்பார்கள். அண்மையில் ஒரு நண்பர் ஆட்டுக்கறியை புளி ஊற்றி செய்து புளிக்கறி என்று பெயரிட்டு பகிர்ந்து இருந்தார். ஆட்டை வெட்டுவதிலும் பெரும் பாவம் இது. மட்டனை மதிக்காமல் புளியை மதித்து பெயர் வைப்பது. புளிக்கறி என்கிற பெயர் பதின்னொன்னாம் நூற்றாண்டிலேயே புழங்கப் பட்டுள்ளதாக கல்வெட்டு தகவல்கள் கூறுகிறது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத் துறை வெளியிட்ட கன்னியாகுமரி கல்வெட்டுகளில் இருக்கும் குறிப்பு.

கன்யாபகவதி கோயில்‌ உண்ணாழியின்‌ அருகில்‌ உள்ள திருச்சுற்றின்‌ தெற்குப்‌ 
பக்கச்‌ சுவரில் இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டு.

கல்வெட்டின் இடைப் பகுதி மட்டும் உள்ளது. கன்யாபகவதி கோயிலுக்கு மஹாநவமி யன்று தயிரமுது, நெய்யமுது ஆகியவைகள் படைப்பதற்காகக் கொடை வழங்கியதைக் குறிக்கிறது.

டல் [அ]ரிசியும் நாழி நெய்யமுதும் அஞ்ஞாழித் தயிரமுதும்

[புளிகறியமுதும் டு குமரிமங்கலத்து கன்னியாபடாரி யார்க்கு 2ஹஊானவமிக் [கு] படைப்ப அரிசி! நால்கலம்த்தி. வதாக இவ்வூர் உகச்சுமன் அம்மைச்சாத்தன் (வைச்ச, . உஉ, உமிர்து [அ] ஞ்ஞாழி தயிரமிர்து நாழி [நெயமிர்தும்

உரி கறியமிர்துங் கொண்டு செல்வதாக [வைச்]

முதல்‌ [யி]வ்வாண்டு வாரியஞ்செயர[யும்‌] வாரியர்‌... , ௪ 

வைப்ப பொன்‌ ஃ அ[தி]யனான கொற்றி தேவத்‌ தேவன்‌ மணி 
யன்‌ வைச்சானுடைய , . 

ப்‌ உரு 1 கதக்‌ » [டி] த) 
நின்‌ இல வ்‌ க்‌ க்க நாலுங்‌ கொண்டு அவ்வாண்டு வார்யஞ்‌ 

செய்யும்‌ வாரிய/ரே] செலுத்துவதாக . ,

என்கிறது.

தயிரமுது நெய்யமுது போல் புளியமுது என்க வில்லை. தெளிவாக புளிக்கறியமுது என்கிறார்கள். 

ஆக இந்த புளிக்கறிக்கு 1000 ஆண்டு வரலாறு கல்வெட்டிலேயே இருக்கிறது. 

புளிக்கறி குறித்த என் பழைய பதிவு ஒன்று வருவது.

வெள்ளியும் செவ்வாயும் பருப்பு அவிக்கனும் என்பது நிறைய வீடுகளில் சமையல் விதியாகவே மாறிப் போனது, சாம்பாரும் பருப்பு குழம்பும் அன்றைய ஆகாரமாகிப் போக, இன்று துவையலும் புளிக்கறியும் சொன்னால், வெள்ளிக்கிழமை துவையல் யாரு அரைப்பாங்கன்னு அதுவும் வறுத்து அரைத்து கேட்கிற அளவுக்கு நம்பிக்கையில் மண்ணு விழுந்து கிடக்குது. 

சென்னையில் வசிக்கும் போது நாஞ்சில் நாட்டு புளிக்கறிக்காக சொந்தக்காரங்க வீடெல்லாம் தேடிப் போனதுண்டு. கிடைக்கும் ஆனாலும் அம்மா பெரியம்மா வைக்கும் அளவிற்கான கைப்பக்குவம் இந்த தலைமுறையில் இல்லை. அதைப் புளிக்குழம்பு என்பது ருசிப்பிழையாக தான் முடியும். மனைவி சொல்லுவாள், கிழக்கே இதை வெள்ளக்குழம்பு என்பார்கள் என்று. பதிலுக்கு புளிக்கறி ருசி அறிய நீ முதலில் அதை முழுமையாக வைக்கப் பழகு என்றால் முகத்தில் கோவம் தாளிக்கும்.

அதன் ருசி என்பது காய்கறி மனத்தோடு சூட்டுப் பக்குவம் தான் முக்கியம், அதிகம் கொதித்தாலும் அல்லது கொதிக்க விட்டாலும் ருசி தீய்ந்து போகும். அந்த பக்குவத்தின் முன் இறக்கினாலும் பச்சைவாடை தான் மிஞ்சும். அதிகமாக திருவி எடுத்த தேங்காயோடு கொஞ்சம் உரித்து வைத்த ஈருள்ளி (சின்னவெங்காயம்), ரெண்டு வத்தல், மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் வறுக் வறுக் என அந்த காலங்களில் அரைக்கும் ஓசை இன்னும் நாவோடு ஒட்டிக் கொண்டு தான் உள்ளது. மஞ்சளுக்கு அம்மி இரண்டு தட்டு தட்டிவிட்டு மீழும். நல்ல வடிய அரைத்து உருட்டி எடுத்து வைத்திருப்பார்கள். கூடவே அரைத்த அம்மியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வழித்து எடுத்து அம்மிப்பால் என வைத்து இருப்பார்கள். தேங்காயோடு ஈருள்ளி, மஞ்சப்பொடி வத்தல் பொடி போட்டு மிக்சியில் விட்டு ஓட்டி ஆட்டி ஜூஸாக எடுத்து விடுவர், 

வெண்டைக்காய் புளிக்கறிக்கு வெண்டைக்காய், ஈருள்ளி எண்ணெயில் வதக்கி புளிவிட்டு அவித்து தனியே வைத்துவிடுவர். தடியங்காய் புளிக்கறிக்கு, காயை நறுக்கி அப்படியே அவித்து எடுத்து வைத்தால் போதும், தடியங்காய் புளிக்கறி ஒரு தெரு மணக்கும் வல்லமை கொண்டது வெள்ளரிக்காய்க்கும் கூட இதே பக்குவம். முருங்கைக்காய் கத்தரிக்காய் சேர்ந்திட்டு செய்வது முன்பு சொன்ன வெண்டைக்காய் பக்குவம் தான். பெரும்பாலான நேரங்களில் காய்கறி இல்லாமலும் கூட புளிக்கறி அரங்கேறும். காய்கறி இல்லேன்னா ஈருள்ளி வெந்தயம் புளிக்கறி வைத்து சமாளிப்போம் என்பது வீட்டு தலைவிகளின் நம்பிக்கை. 

அந்த அரைப்பை எடுத்து புளி உப்பு, அம்மிப்பால் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கரைசலாக்கி, அதில் பக்குவமாக்கிய காய்களை கொட்டி வெறும் ஈருள்ளி கடுகு போட்டு தாளித்த தாளிப்புடன் சேர்த்து அடுப்பு சூட்டில் தேங்காய் சட்னியின் அதே பக்குவத்தில், கொதிக்க தொடங்கும் முன் கறிவேப்பிலை போட்டு இறக்கி விடுவர். மற்ற எல்லா குழம்பும் எங்கும் கிடைப்பினும் இது தேங்காய் பயன்பாடு கருதியே மற்ற இடங்களில் அருகி இருக்கலாம். நாஞ்சில் நாட்டு உணவு முறையில் தேங்காய்க்கே எப்போதும் முன்னிடம் இருக்கும். இதற்கு காணத்துவையல் அருகூட்டு. இலேசாக வறுத்த கொத்தமல்லி துவையல் உடன்பிறப்பு. கஞ்சிக்கு புளிக்கறியும் தேங்காய் துவையல் அதுவும் அதிக பூண்டு இட்டு லேசாக நுணுக்கிய துவையல் தேவாமிர்தமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை