ஆனி ஆடி சாரல்

எப்படியும் இன்று இரவு இல்லை நாளை காலைக்குள் பிரசவம் இருக்கும். 

மேற்கே வீசுவது வளர்பருவ திருவோணபிறை. வெண்பஞ்சு மெத்தையில் கிடந்து ஒளிவீசும் புன்னகை குழந்தை போல் வீசுவது நல்ல அறிகுறி. மழலையின் சிரிப்பென பிறையும் மிக நெருக்கமானது. அருகே செவிலி போல் ஒரேயொரு வெள்ளி மட்டும் சிமிட்டிக் கிடக்கிறது. பிரகாசத்தின் சுற்றம் எப்போதும் இருண்டே கிடப்பது போல் வானமும். இரவுக் குளியலின் நீர் வெகு நாட்களுக்கு பிறகு குளிர்ந்து நிறைகிறது. 

மதியம் வந்த வலி போதுமானதாக இல்லை. தொடுபிடியான வலிகள் வரவேண்டும். தேகம் தொடும் காற்றின் வெப்ப நிலை செய்தி தரும். மேற்கிலிருந்து வரும் செய்திகள் நல்லதாகவே இருக்கிறது. இப்படி நாள்கடந்து போவது எல்லோருக்கும் ஒருவித பதட்டத்தை உருவாக்கியது. தொண்டையில் இறங்கும் நீர் உவர்ப்பானதாக மாறி வெகுநாள் ஆகிவிட்டது.

நிறைமாத சூலி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாள். இதற்கு மேல் சுமைகளை தாங்க முடியாது என நம்பிக்கை தளர்கிறது. வலிகளை, வேதனைகளை இறக்கி வைக்க நாளை காலைக்குள் நல்ல செய்திவரும். 

நாளை காலைக்குள் பிரசவம் நடந்துவிடும். மேற்கு தொடர்ச்சி மலை முகடுகளில் தவழ்ந்து பாலருந்தி வரும் சிசு சில்லென்று மலையிறங்கி எல்லோரிலும் தவழ வேண்டும். மழலை தொட்டு குதூகலிக்கும் பாலகனாய், மழை தொட வேண்டும். நாளை காலைக்குள் பிரசவம் நேர வேண்டும்.

தென்மேற்கு பருவம் எங்களை அணைத்து செல்ல வரும் ஆதிசிசு. யாருக்கும் கிடைப்பதற்கு அரிதான வரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை