சித்ரா பவுர்ணமியும் குமரியும்
எதேட்சையாக அமைந்தது என்றாலும், சித்திரை முழநிலவு நாளில் நிலவாக நின்றிருக்கும் அம்மையை காண எங்கோ சென்ற வாகனம் அங்கு திரும்பியது. கடும்பச்சை நிற பாவாடையும் சந்தன நிற சட்டையுமாக மூக்குத்தி மின்ன மின்ன நின்றிருந்தாள் குமரி அம்மை. பகவதியோ மினாட்சியோ கன்னியாவோ கன்யாவோ மரியோ மேரியோ பெண்நபியோ கவுந்தியடிகளோ உங்களுக்கு ஒவ்வொரு மனம். அவள் இந்நிலத்தின் பெருவடிவம், பெருஅரண், பெருங்கருணை, பேரழகி சிறு தெய்வம். கருங்கற்கள் கூடத்தில் அவள் காதில் ஓங்கி ஒலிக்கும் வண்ணம் உரத்து அடித்துக் கொண்டிருந்தது அலை! வெள்ளை யானை போன்ற தோற்றத்தோடு நிலவை கண்ட அலைகள் மனதின் எழுச்சி போல் கரையில் வேக வேகமாக அடித்தாலும், கரை நோக்கி காற்று வீசாமல் இருந்தது இயற்கை முரண். பங்குனி முழு நிலவான பங்குனி உத்திரம் கடந்து சித்திரை முழு நிலவான சித்திரை நிறைந்த சித்திரை நாள் இடையேயான 28 சந்திரநாட்களே இந்திர விழா கொண்டாடப் பட்டிருக்கிறது. "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்" (சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதை). இந்திரன் மருதநிலத்து வேந்தன் அன்றி வேறில்லை. குமரி மண்ணின் மிகப் பழமையான இந்திரன் கோவில் சிவிந...