சித்ரா பவுர்ணமியும் குமரியும்
எதேட்சையாக அமைந்தது என்றாலும், சித்திரை முழநிலவு நாளில் நிலவாக நின்றிருக்கும் அம்மையை காண எங்கோ சென்ற வாகனம் அங்கு திரும்பியது. கடும்பச்சை நிற பாவாடையும் சந்தன நிற சட்டையுமாக மூக்குத்தி மின்ன மின்ன நின்றிருந்தாள் குமரி அம்மை. பகவதியோ மினாட்சியோ கன்னியாவோ கன்யாவோ மரியோ மேரியோ பெண்நபியோ கவுந்தியடிகளோ உங்களுக்கு ஒவ்வொரு மனம். அவள் இந்நிலத்தின் பெருவடிவம், பெருஅரண், பெருங்கருணை, பேரழகி சிறு தெய்வம். கருங்கற்கள் கூடத்தில் அவள் காதில் ஓங்கி ஒலிக்கும் வண்ணம் உரத்து அடித்துக் கொண்டிருந்தது அலை! வெள்ளை யானை போன்ற தோற்றத்தோடு நிலவை கண்ட அலைகள் மனதின் எழுச்சி போல் கரையில் வேக வேகமாக அடித்தாலும், கரை நோக்கி காற்று வீசாமல் இருந்தது இயற்கை முரண்.
பங்குனி முழு நிலவான பங்குனி உத்திரம் கடந்து சித்திரை முழு நிலவான சித்திரை நிறைந்த சித்திரை நாள் இடையேயான 28 சந்திரநாட்களே இந்திர விழா கொண்டாடப் பட்டிருக்கிறது.
"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்"
(சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதை).
இந்திரன் மருதநிலத்து வேந்தன் அன்றி வேறில்லை. குமரி மண்ணின் மிகப் பழமையான இந்திரன் கோவில் சிவிந்திரம் எனும் இப்போதைய சுசீந்திரம்.
பகவதி மீனாட்சி துர்க்கை கண்ணகி, வேந்தன்-இந்திரன், மாயோன் திருமால், சேயோன் முருகன் காலத்தினால் நேர்ந்த பிறழ்வு. தொடர்புடையது.
அழகர் மலை அழகர் குன்று ஏறிய அதே அழகன் தான். இதே சித்திரை முழுநிலவு அன்று தான் அவரும் ஆற்றில் இறங்குகிறார். ஆற்றுதல் தான். தகிக்கும் மதுரை நீர் ஆற்றும் வைபவம். வருணனை வேண்டுதல் இந்திர விழாவின் ஒரு கூறாக நிகழ்த்தப் பட்டிருக்கிறது பூம்புகாரில் மதுரையில். மதுரையை எரித்து சேரம் சென்ற மங்கலதேவி கண்ணகிக்கும் இதே நாள் தான். இதே முழு நிலவு தான்.
சிவிந்திரம் ஊரில் இருந்து குமரியின் நிலவைக் காண செல்லும் வழியெங்கும் பெண்கள் ஆங்காங்கே அந்தந்த ஊர் அம்மன், தம்புராட்டி மாடத்தி கோவில்களில் பொங்கல் இட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்திர விழா தெரியுமா என தெரியாது. ஆனால் பொங்கல் அடுப்பில் எரியும் நெருப்பும், கடற்கரையில் வெள்ளை யானை போல் மேலேறி கொண்டிருக்கும் நிலவும் சொல்லும் செய்தி அறமின்மையை எரித்து பொங்கிப் பெருகிய மங்கலத்திற்கு பின்பு அறம் உயர்ந்து நிற்கும் வெள்ளை நிலவு என. நிலவு போன்ற குமரி என.
அங்கே கண்ணகியும் பகவதியும் மீனாட்சியும் வேந்தனும் சேயோனும் மாயோனும் வருணனும் ஆட்சி செய்வர்.
கருத்துகள்
கருத்துரையிடுக