பிறழ்வு

எவர் எனும் தலைப்பில் பாதசாரியின் கவிதை ஒன்று உண்டு. "நாலுபேர் பைத்தியம் எனச் சொல்லும் கசங்கியத் தோற்றத்தில் வந்தவர் கை ஏந்தினார் என்னிடம். மேலாடைப் பையில் கைவிட்டு காசு எடுக்கும் முன் ஆளைக் காணோம். வெளியில் எடுத்த காசை எனக்கு நானே கொடுத்துக் கொண்டாயிற்று ." பிறரை எதிர்கொள்ளும் யதார்த்தம் இது தான். உங்களை எதுவாக எடை போடுகிறார்களோ அங்கு இல்லாமல் இருங்கள். அவர்கள் இடும் எடைகளை அவர்களே சுமக்க வேண்டியது வரும் என்பதே உண்மை. நீங்கள் எழுதும் ஒரு பதிவில் பைத்தியம் என்று எழுத கைகள் நடுங்கியதுண்டா? பலமுறை எனக்கு நேர்ந்தது உண்டு. அந்த வார்த்தையை யாரை நோக்கியும் அல்ல எதன் பொருட்டும் வசை சொல்லாக சொல்ல மனம் கூசும். மனநிலை சரியில்லை என்பதும் கற்பிழந்தவள் என்று வசை சொல் சொல்லுவதும் வேறு வேறு இல்லை. கற்பு என்பதும் தெளிந்த மனநிலை என்பதும் இவ்வுலகில் கற்பனையான ஒன்று தான். மனநிலை குறித்தோ கற்பு குறித்தோ இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் வன்முறை ஏவுவது என்பது மட்டுமே இங்கு பிறழ்வு நிலை ஆகும். சமூகத்தில் கொள்கை கடிவாளம் மட்டுமே போட்டுத் திரிந்து மனித யதார்த்தவாதம் தெரியாத பல வறட்டு கொள்கை வாதிகளும் ஆன்மீக வாதிகளும் அந்திம காலத்தில் மற்றவரை பைத்தியம் என திட்டும் பிறழ்வு நோயால் பாதிக்கப் படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குள் தங்களையே அறிவுஜீவிகள், சுத்த மனது உடையவர்கள் எனும் ஒருவித சுய மதிப்பீட்டை திரும்ப திரும்ப எண்ணி, ஒரு சிக்கலான பிறழ்வை உருவாக்கி இருப்பார்கள். அதிலும் தீவிர அரசியலில், தீவிரம் என்றால் முற்றும் அறிந்த என்பது அல்ல அகராதி. அவர்களுக்கு முற்றும் துறந்த என்பது ஆகும். காதில் ஓதிவிட்ட ஒன்றை மட்டுமே கேட்டுக் கொண்டு, மற்றவற்றை துறந்த ஒருவித தீவிரத் தன்மையோடு திரிவார்கள். "வயசானல் பைத்தியம் பிடிக்கும் என்று" ஊர்புறங்களில் ஒரு சொலவடை உண்டு. சொலவடைக்கு கூட அதை சொல்ல தயக்கம் இருக்கிறது. சிலமிருகங்களுக்கும் அக்குணம் வருவதை கண்டிருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் மேயுறதும் இனவிருத்தி செய்வதாக மட்டுமே இருந்த எங்க வீட்டு கருத்தாடு, என பெயர் வைத்திருந்த வெள்ளாடு ஒன்று எங்களுக்கு அதிகமாக குட்டிகளை ஈன்று கொடுத்து அதிக வருமானம் கொடுத்தது. ஈனமுடியாமல் போன பின்னர், எதிர்படும் எல்லோரையும் கடிக்க ஆரம்பித்தது, மண் தின்றது, வாழ்நாள் முழுவதும் ஒரு வட்டத்திற்குள் வாழ்வை சுருக்கிக் கொண்ட, அதற்கு நோய் என்றது முதுமையின் பிறழ்வே, ஓய்வு அப்படி ஒரு சூழலை அதற்கு கொடுத்தது. குட்டி போட்டு பால் கொடுத்த அந்த ஜீவன் இறுதியாக ஒருவருக்கு விற்கப் பட்டது. வழக்கமாக கடந்து செல்லும் கசாப்புக் கடை வாசலில் ஒருநாள் அதன் தலையும் வெட்டி வைக்கப் பட்டிருந்தது. ஒருநாளும் அந்த ஆடு பிரிதொன்றை பைத்தியம் என்று வசை செய்தது கிடையாது. ஆனால் குணம் அதாகப் பட்டது. பிறழ்வு நிலையில் உள்ளவர்களை அணைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை