சூந்த குளமும் அம்மையும்

மனிதனே குளிக்க மறுத்துவிட்ட சூந்தகுளத்தில் குளிக்க வைத்து தூக்கிச் செல்கின்றனர் அறம் வளர்த்த அம்மையை. சாக்கடை நறுமணம் கமழ பல்லக்கில் செல்லும் அவளுக்கு இன்று திருமணநாள். அதற்காக தாணுமூர்த்தி ஒன்றும் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடிவிடமாட்டார். அவர் குளித்து எழும் தெப்பக்குள புனிதமோ அதற்கும் மேலான ஒன்று. தண்ணீரின் நிறம் பச்சை என தெய்வத்தால் முடியாத அறிவியலால் சாத்தியமாகாத ஒன்றை மனிதன் நிரூபித்துக் காட்டியுள்ளான். குளம் புனிதம், குன்று புனிதம், கடற்கரை புனிதம் என்றதெல்லாம் கடவுளுக்கானதா? கடவுளின் பெயரால் இயற்கையை காப்பாற்றும் முன்னோர்களின் சூட்சமமா? கோயிலே கூடாது என்றவர்கள் குன்றுகளை பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வம் இருக்கின்றது என்பர்வகள் அதன் சீரழிவுக்கு தெய்வத்தை பழக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் மனிதனின் மகத்தான குணம். குமரன் இருக்கும் குன்றெல்லாம் இன்று ஓரளவேனும் மிச்சப் பிடித்து இருக்கின்றது. முருகனே மலை என்றால், வெடி வைத்து முருகனை பிளக்க மனம் வராது. அப்படியே ஒருவன் இருந்தாலும் முருகனின் பெயரால் சமூகம் அந்த மலையை காக்கும் என்று தான் ஆண்டியாய் அவனை மேலேற்றி இருக்க முடியும். எங்கும் குன்றுகளில் இருக்கும் முருகன் செந்தூரில் மட்டும் கடல் பார்த்து இருக்கிறான் என்றால், அந்த கடற்கரையின் இயற்கை வளத்தை அன்றே கணித்து இருக்கக் கூடும் என்று தானே யூகம். அந்த கடவுளையே மிஷனரிகள் கடலில் எறிந்து விட்டு சென்ற பின்னர், மீட்டுக் கொண்டு வந்து ஒரு கூட்டம் சுற்றி இருந்து தெருவுக்கு ஒரு குழு என காசு சம்பாதித்துக் கொண்டு இருக்க, இன்னொரு குழுவோ கடற்கரையின் கனிமத்தை அள்ளி நாடுகடத்தி கார்பரேட் ஆகிக் கொண்டு இருக்கிறான். இரண்டிற்கும் இடையே மனிதனின் பக்தியோ நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போகிறது. அன்னதானங்களும் நீர் பந்தல்களும் பதிலியாக சமன்படுத்தப் படுகின்றன. காணக் கண் ஏது முகமற்ற சண்முகருக்கு என்பது கல்லாப் பெட்டியில் பூட்டப்படும் சூத்திரம். இயக்கங்கள் எல்லாம் கடவுளைக் காப்பாற்ற போகிறோம் என்கிறார்கள். யாரிடம்? இன்னொரு மதவாதிகளிடம் இருந்தா? அங்கும் உங்களைப் போல் இருக்கும் அடிப்படை வாதிகளிடம் இருந்தா? நீங்களே துணை போகும் சீரழிவில் இருந்து மலையை குளத்தை நீர்நிலையை கடற்கரையை காப்பாற்றுங்கள். மருத்துவ மாபியாக்கள், முதல் நறுமண பொருட்களின் வியாபாரிகள் வரை நீளும் மிகப்பெரிய சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து நம்மை நாம் காக்க முடியும். தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மை தான். இயற்கை என்றேனும் நம்மை வச்சி செய்யும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை