பரோட்டாக் கடை நாகரீகம்
எல்லா ஊர்களிலும் அடிக்கடி சாப்பிட்டு உள்ளேன். அந்த அனுபவத்தில் நாஞ்சில் நாடு வெஜ் சாப்பாட்டிற்கு ரொம்ப அனுக்கம் இல்லை தான். ஆனால் அசைவத்தில் அடித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு ஊரிலும் அசைவத்தில் ஒருவகை சிறப்பாக இருந்தால், இங்கே அசைவத்தின் அனைத்து வகைகளும் சிறப்பாக கிடைக்கும்.
பார்டர் பரோட்டா கடையை கொண்டாடுறாங்க. நம்ம ஊர் அக்கரை இறக்கத்தில் இருக்கும் மணியன்ணன் கடைக்கு ஈடாகாது அது. தேரூர் மாஸ்டர் கடை டேஸ்ட் சாப்பிட்டால் இராமநாதபுரம் பரோட்டா பிரியர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். குலசேகரன்புதூர் ஶ்ரீநிவாஸ் பரோட்டாக்கு கடையநல்லூர் பரோட்டா நெருங்க கூட முடியாது. விகேபுரம் சர்தாரில் மூனு வகை சால்னா இல்லாட்டீ பரோட்டா என்பது கேள்விக்குறி தான். சவேரியார் கோவில் Rk இல் கொத்து புரோட்டா வேறெங்கும் வாய்ப்பு இல்லை. அண்ணன் Murugesan Murugesan இன் ஒழுகினசேரி கடையில் கொத்துக்கோழி அடிச்சுக்க முடியாது. கூட சப்பாத்தியோ இடியாப்பமோ அள்ளும். வைரமாளிகையில் ஒரு நாள் சாப்பிட்டேன். நாட்டுக்கோழி நாட்டுக்கோழி அடிச்சுகிட்டாங்க. பொறிப்பு வைத்துக் கொண்டு பரோட்டா குழம்பை வைத்து திரும்பி விடுகிறார்கள். கிருஷ்ணன் கோவில் அரசமூடு ஜங்ஷனில் ஒரு கடை உண்டு. நாட்டுக்கோழி வாங்கி வைத்துக் கொண்டு சுடச்சுட கையளவு கல்தோசை கோழிக்குழம்பு ஊத்தி வாங்கி வாங்கி சாப்பிட்டு இருந்தா எந்திரிக்க மனம் இருக்காது. இப்போ அவர் கடையை கைமாற்றி விட்டார். என்ன ஆனாலும் பொரித்த ரொட்டிக்கு உடன்குடி குரும்பூர் அதிபன் தான்.
ஆம்லெட் சின்னவெங்காயம் போட்டு தேங்காய் எண்ணெயில் பொரித்து தின்பது குமரி மேற்கு மாவட்ட சிறப்பு. புல்ஸ்ஐ வாங்கி தவத்தை முழுங்குவது காலங்காலமான பழக்கம். நாகர்கோவில் மேற்கு பகுதியில் பார்வதிபுரம் ஶ்ரீதேவி சிக்கன் கார்னர் நிறைவு செய்யும். பீப் ரோஸ்ட் இதில் எல்லாக் கடையிலும் சிறப்பு தான். அதிலும் காதர் ஆஸ்பத்தரி எதிரே பிஸ்மிக்கு கூடுதல் சிறப்பு உண்டு. இங்குள்ள மாட்டுக்கறிபோல் சாப்ட்டாக சாப்பிட கேரளா தான் போகனும். ஆப்பம் மட்டனுக்கு வடசேரி ஷாமா, ஆப்பம் கடலைக்கறி குறிஞ்சி. ஆப்பம் கடலைத்தீயல் வைத்து அமுதூட்டிய சேட்சி கடைகள் காலப் போக்கில் காணாமல் போனது. தட்டை சுக்காப்பி மணிமேடை கடை அரை நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறது. தெருவுக்கு ஒரு சூப் கடை மாட்டுவால் ஆட்டுக்கால் சூப்போடு குடல் கறிக்கு, ரத்தப் பொரியலுக்கு வெங்காயம் தூவி தந்த இடங்கள் அருகிப் போனாலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு இன்னும் இருக்கிறது. இடலாக்குடி கண்ணன் கடையில் தண்ணீர் சாம்பார் சட்னியோடு ஆப்பம் ரசவடை வைத்து தின்றால் மூனு வேளையும் கேட்கும். அங்குள்ள சட்னியை குளிக்கலாம் என்பார் ஆப்ப பிரியர் Nisha Natarajan Mdmk அண்ணன். குளித்தாலும் சுவை மாறாது. பச்சைமிளகாய் தேங்காய் கலந்த வாசம் அப்படி. ஆசாத் கடை ஆப்பம் மட்டன் எனில் பக்கத்தில் பிரபு பிரியாணிக்கு ஒரு ரசிகர் மன்றம் உண்டு. சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு தோழியின் மகன் ஊருக்கு வருவதே பிரபு பிரியாணிக்கு என்கிறபோது சொந்த ஊர்சுவை என்பது எந்த ஊரில் இருந்தாலும் மரபார்ந்து தொடர்வது தானே. திண்டுக்கல் வேணு பிரியாணி தலப்பாக்கட்டி முதல் ரோட்டோர கையேந்தி பிரியாணி வரை சாப்பிட்டாலும், மணிமேடை sp office ரோட்டில் இருக்கும் ஓட்டுக் கட்டடம் நாஞ்சில் நாட்டு தலப்பாக்கட்டி சுவை திண்டுக்கல்லில் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் தீர்ந்தும் விடுகிறது. அஞ்சப்பர் மூடியே வருடம் ஆகிறது. ஆசிப் தலப்பாக்கட்டியும் இங்கு வந்து எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்க முடியவில்லை. Traditional டேஸ்ட் கடைக்கு கடை கிடைக்கும் போது நாஞ்சில் நாட்டில் கார்பொரேட் டேஸ்ட் என்பது ஒன்றும் இல்லாமால் போனது. மீன் சாப்பாட்டுக்கு நிறைய கடைகள் இருந்தாலும் வீட்டில் வைக்கும் புளிமுளமும் அவியலும் கருத்தக்கறியும் சுவை எந்தக் கடையிலும் வந்து விடாது. அதனால் தான் இங்கு முக்கடல் மூனுசுவை மீன் கிடைத்தாலும் இங்குள்ள மீன் சாப்பாட்டுக் கடைகள் பெரிதாக சோபிக்க வில்லை. ஆனால் காசிமேடு முதல் இராம்னாடு வரை மீன் என்ன ஃப்ரெஷ் ஆ கிடைத்தாலும், தூத்துக்குடி முதல் நீரோடி வரை உள்ள மீன் டேஸ்ட் எங்கும் கிடைக்காது. உங்களுக்கு கடை சுவை. எங்களுக்கு கடலே சுவை தான். அதுபோல் தான் புளிக்கரியும், எரிசேரியும், பச்சடியும், உப்புலோடும் கூட்டவியலும் சுவை வீடு தாண்டி கடை ஏறிவிடாது. வெகு காலமாக நேஷனல் சைவம் என்கிற ஒன்றை போட்டுக் கொண்டிருந்த ஆரியபவன் சைவத்தை கல்யாண வீட்டு ஸ்பெஷல் தாழக்குடி நீலகண்டன் கடை வந்த பிறகு கொஞ்சம் நாஞ்சில் நாட்டு சைவமும் கிடைக்கிறது.
இன்னும் நிறைய கடைகள் சொல்ல மறந்திருக்கலாம், ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு சுவை. இங்கு நிலைத்து நிற்கும் கடைகள் எல்லாம் தனித்த சுவையாலே!
கருத்துகள்
கருத்துரையிடுக