உழுந்தும் நாஞ்சில் நாடும்
உளுந்துக்கும், நாஞ்சில் நாட்டு உணவு முறைக்குமான உறவு என்பது ஒரு மருத்துவ மரபு. பெண் குழந்தை பெரியவள் ஆனது முதல், மாப்பிள்ளை சோறு கொடுத்தல், தொடர்ந்து அடியந்திர வீடுகளில் கறி சோறு கொடுப்பது வரை உளுந்தின் பயன்பாடு என்பது இன்றியமையாதது. உளுந்தஞ்சோறு என்பது ஞாயிறுகளில் இன்றும் தொடர்வது.
சீரகமும், வெந்தயமும் வறுத்து வைத்து உலை தண்ணீரை கொதிக்க வைக்கும் போதே இதையும் தட்டி, கூடவே துருவி வைத்த தேங்காய் பூவும் போட்டு, கொதிக்க வைக்கின்றனர். பிறகு தனியே வறுத்த #தொலி உளுந்தையும், நன்கு கழனி பிசைந்த புழுங்கலரிசையும் சேர்த்து தேவைக்கு உப்பும் போட்டு மூடி கொதிக்க விடுகின்றனர். நன்கு கொதித்ததும் அதில், சிறிது நசுக்கி வைத்த வெள்ளை பூண்டும், சுக்கும் போட்டு கிளறி பொத்தி அமுக்கி மூடி வைக்கும் பக்குவம் நல்ல மணமுள்ளதாகவும், சுவையானதாகவும் இருக்கிறது. இதற்கு தொடுகறி அவசியம் இல்லாத அளவுக்கே இருப்பினும் இங்கு அதற்கென பெரும் வரிசையே உண்டு.
திருநெல்வேலி நண்பர் ஒருவர் தயிர் ஊற்றி, எள்ளுத் துவையலோடு சாப்பிடுவார் அவரோடு சாப்பிடுகையில் அது ஒரு தனிச் சுவை தான்.
நாஞ்சில் நாட்டில் சைவக்காரர்கள் இதற்கு கூட்டவியல், கூழ் வற்றல் அப்பளம், கொத்தமல்லி துவையல் சேர்த்து சாப்பிடுகின்றனர்.
மல்லித்துவையல் என்பது மல்லி, வத்தல் உளுந்தம்பருப்பு, தேங்காய், போட்டு லேசாக வறுத்து கொஞ்சம் புளி உப்பு சேர்த்து அரைப்பது.
அசைவ பிரியர்கள் இலையிலும் இடம் பெறுகிறது மல்லித்துவையல். கூடவே, கருவாட்டு அவியல் பிரதானம். நெத்திலிக் கருவாட்டை விட முறைக்கருவாடு அதிகம் பயன்படுத்தினர். இப்போது கருவாடு அரிது. நல்ல மணமுள்ள கருவாடு வருவதுமில்லை. மணமெனில் சமைக்கும் போது எழும் மணம். பாலீதீன் கவர்களில் வரும் கருவாடுகள் காகிதப் பூக்கள் தான். கருவாடும் பச்சைத் தேங்காய் அரைப்பும் சேர்த்து புளி தூக்கலாக நிற்கும் அவியலில். இப்போது கருவாட்டின் இடத்தை அவித்த கோழி முட்டை நிரப்பி, லெக்கான் முட்டை எனப்படும் பிராய்லர் முட்டைக்கு வந்தாட்சு. தேங்காய் அரைப்பின் மணத்தோடு வெறுவி சாப்பிட வேண்டியது தான். வேறுவழி இல்லை.
அம்மா, உளுந்தஞ்சோற்றுக்கென முட்டை கறுத்தக்கறி வைப்பார்கள். நல்ல மிளகு, சுக்கு, ஓமம், வெள்ளை பூண்டு, கடுகு போட்டு வறுத்து அரைத்து அரைப்பில், முட்டையும் அவித்துக் கீறி போட்டு கெட்டியான பக்குவத்தில் இருக்கும். ஞாயிறுகளில் மீன் கிடைப்பதில்லை இங்கு. கிடைத்தால் முட்டைக்கு பதில் திரச்சியோ, சிறாவோ, சூரை மீனோ இருக்கும். உளுந்தஞ்சோற்றில் போட்டுச் சாப்பிட... சாப்பிட.... கொண்டா கொண்டா என நாவு கேட்டுக் கொண்டே இருக்கும் அப்படி ஒரு சுவை.
உளுந்து முதுகெலும்பு வலிக்கும், மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் சிறந்ததொரு தானியம். நல்லெண்ணெயும், கருப்பட்டியோடு தொலி உளுந்தும் சேரும் இடத்து அதன் மருத்துவ பயன்பாடு தீவிரமாகிறது. இன்றும் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் வீடுகளில் கட்டாயம் உளுந்தங்களி கிண்டி எடுத்து உறவுக்காரர்கள் பார்க்க வருவது என்பது ஒரு சடங்காகவே இருக்கிறது. சிலர் தொலி உளுந்தும், பச்சரிசியும், நாட்டுக் கோழி முட்டையும், கருப்பட்டி, தேங்காய், நல்லெண்ணெய் வாங்கிச் சென்று கொடுக்கின்றனர். அவர்களை ஒரு நாள் அழைத்து விசேச வீட்டார் விருந்து வைக்கின்றனர்.
உளுந்தங்களி முதுகுத் தண்டுவட பிரச்சனைக்கும் நல்ல மருந்தாகிறது. அதிலுள்ள அதிகப்படியான கால்சியம் எலும்பு பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்துகிறது. தொலி உளுந்தும், வெந்தயமும், சிறிது பச்சரிசியும் நன்கு கழுவி, வெயிலில் உலரப் போட்டு, உலர்ந்ததும் பட்டுப்போல் நன்றாக திரித்து (பொடித்து) கப்பி இல்லாமல் எடுத்து, நயம் கருப்பட்டி தட்டி தண்ணீரில் கொதிக்க விட்டு, பாகு இளகும் பருவத்தில் மாவை தட்டி நன்கு கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு, களியின் மீது நல்ல நல்லெண்ணெய் ததும்ப ஊற்றி, மூடி வைத்து விடுகின்றனர். நல்லெண்ணெய் உடம்புக்கு ஒத்து வராதவர்கள் நெய் ஊற்றி சாப்பிடுகின்றனர். ஆனால் நெய் என்பது கொழுப்பை தான் ஏற்றும். எந்த பிரயோஜனமும் அல்ல. நல்ல வாசமுள்ள நல்லெண்ணெய் கிடைத்தால் உசிதம்.
கருத்துகள்
கருத்துரையிடுக