மட்டி புவிசார்

 மட்டிப் பழத்திற்கு புவிசார் குறியீடு.


மட்டிப் பழம் எங்கள் ஊர் பூலான்செண்டு தானே என பலர் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டியை தொடர்ந்து உண்டிருந்தால் பூலான் செண்டு ஒரு பழமாகவே எண்ணி இருக்க மாட்டார்கள். பலருக்கு கதலி மற்றும் ரஸ்தாளி என்கிற நினைப்பிலே இருக்கின்றனர். 


மட்டி கனிய விட்டுத் தின்பதிலே தான் சுவை அதிகம். கனிய கனிய தேனாகும். தேனீக்கள் உதவியற்று தேன் சேகரித்து வைக்கும் பழம் இது. அதற்கு நன்கு கனிய விடணும். ரசக்கதலி காயோடு உரித்தாலும் தொலியில் பழம் ஒட்டாது. சிறுவர்களின் குஞ்சுமணி வடிவொத்த பழம் காதலியும் மட்டியும். "மட்டிப்பழம் பத்திரம் மக்ளே காக்கை தின்னுறாம" என்று தாத்தாக்கள் மாமாக்கள் அசைக்கும் போது பாடி பவுண்டரி தாண்டி சிக்சருக்கு பறக்கும் பந்துகள் பால்ய அத்துமீறலை நிகழ்த்தி விடவில்லை. 

மெல்லிசான தோல், வளைந்த வடிவம், நீண்ட நுனிக்காம்பு ஒரு சீப்பில் குறுகுறு என எண்ணற்ற காய்கள். ஒரு சீப்பை கொண்டு வைத்தாலும் திரும்பிப் பார்க்கும் முன் தின்று விட்டு அடுத்து என்று கேள்வியோடு பார்ப்பான் சின்னவன். முன் பழத்தொலியை குவித்து வைத்து இருப்பான். எவ்வளவு தின்றாலும் பயம் இல்லை. சளி பிடிக்காது. இரைபிரட்டு இருக்காது. எளிதில் ஜீரணமாகும்.


சுவைக்கும் மீறிய மணம் தான் அதன் சிறப்பு. நறுமண தைலங்கள் மிஞ்சிய ஒரு நறுமணம். கரிய மரஉத்திரமும் கனத்த இடைக்கதவும் கொண்ட அந்தகால பூட்டி வைத்த அரங்கின் இருளில் செம்புப் பானையில் பித்தளை உருளியில் அரிசியோடு ஒளித்து வைத்திருக்கும் மட்டிப் பழத்தை மணம்தேடி துழாவி எடுத்து இருட்டில் நின்று திருட்டுத்தனமாக தின்று களித்த குழந்தைப் பருவம் என்னுடையது. உடன் கலக்கும் கருப்பட்டி வாசத்தை பிரித்து அறிய முடியாதவாறு பாத்திரத்தை உருட்டி மாட்டியதும் உண்டு. கருப்பட்டியும் மட்டியும் தனி அரங்கில் இருட்டில் வைத்து விட்டால் அதொரு ஏகாந்த கலவியின் வாசம்.

பின்னாட்களில் அதை நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு படித்த போது மதினியும் அத்தானுமாக அதில் வரும் பாத்திரங்களை கருப்பட்டியும் மட்டியுமாகவே உருவகம் செய்ய முடிந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை