வழியனுப்புதல்
தன்னை பார்த்து விட்டு ஊருக்குத் திரும்பும் பெற்றோரை வழியனுப்ப கணவனோடு பேருந்து நிலையம் வந்திருக்கிறாள் புதுப்பெண் ஒருத்தி. பேருந்து கிளம்ப நேரம் இருக்க நால்வருமாக நடைமேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேகம் கவிந்த சூழலில் மெல்லிய சாரல் விழுவது போல் ஆளுக்கொரு திசையோடு அழகிய மொட்டைப் போல் நின்று கொண்டு இருக்கிறார்கள். பேருந்துக்கான நேரம் நெருங்க நெருங்க பெரியவர்கள் இருவரும் படிக்கட்டு அருகே இருக்கும் தங்கள் இருக்கைகளில் அமர்கிறார்கள். வெளியே நின்றிருந்த புதுப்பெண் தன்னுடைய செல்போன் கவரிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அவர்களிடம் கொடுக்குமாறு தயங்கிக் கொண்டே கணவனிடம் நீட்டுகிறாள். அவன் ஒருவித கூச்சதொனியில் நீயே கொடு என மனைவியை தள்ளி விடுகிறான். படிக்கட்டில் நின்றவாறே தன் தகப்பனிடம் நீட்டுக்கிறாள். அவர் மறுக்கும் முன்பே அவர் மடியில் அதை வைத்துக் கொண்டு திரும்புகிறவளின் முகம் எங்கும் அப்பிக் கிடக்கிறது நாணம். எல்லாம் தனக்கே அர்பணித்து விட்ட தகப்பனிடன் நாணம் கொள்ளவும் மகள் எனும் பெண்மைக்கு வாய்க்கும் தருணம் பேரழகாக விரிகிறது.
ரூபாயை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் மொழியற்று மௌனமாய், இமைக்க மறந்த விழிகளோடு வெளியே நிற்கும் தங்கள் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்க இளம் ஜோடிகளுக்கு இடையே மலர்கிறது புரிதலின் முதல் தளிர். புன்னகை விரிய விரிய பரிமாறிக் கொண்டே தன் மனைவியை மெல்ல அணைத்துக் கொள்கிறான். அவனறியாது பெற்றோர் அறியாது கண்ணோரமாய் கசியும் துளி நீரை லாவகமாக துடைத்துக் கொள்கிறாள். அவளின் தந்தையோ சூழ்ந்த மௌனத்தை விலக்க சிரமப்படுகையில் அவளின் தாய் அருகிலிருந்த தன் கணவன் காதில் ஏதோ சொல்கிறாள். அவர் உடனே தன் மகளை அழைத்து கையில் ஐநூறு ரூபாய் தாளை நீட்டுகிறார். அவளும் மறுப்பேதும் இன்றி வாங்கிக் கொண்டு கணவன் வீசிய புன்னகையோடு அதை தன் அலைபேசி கவருக்குள் வைத்துக் கொண்டாள்.
ரூபாய் என்பது வெறும் காகிதம் அல்ல அழகான சூழ்நிலை மலர் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே மெல்ல பின்புறமாக நகர்கிறது பேருந்து.
கருத்துகள்
கருத்துரையிடுக