கல்லாக்காரரின் அன்பு
அவன் ஒரு மாற்றுத் திறனாளி சிறுவன். உள்ளூர் ஹோட்டலுக்கு தினமும் இரவு சாப்பிட வருகிறான். இரண்டு கைகளால் அமிர்தத்தை புசிப்பது போல முக மலர்ச்சியுடன் அள்ளி தின்று, இலையையும் மிகப் பொறுப்போடு அப்புறப் படுத்திவிட்டு பாதி கழுவி முடித்த கையோடு கல்லா அருகே வந்தவன், சர்வரை எதிர்பாராமல் ₹200 நீட்டியவாறே இரண்டு பரோட்டா ஒரு நெய் என கத்த, ஹோட்டல் முதலாளி ₹66 போக மீதி ₹33 இதோ என நீட்டியபடி இன்னொரு கையில் நூறு ரூபாயை மறைத்து வைத்துக் கொள்கிறார். அவன் 200 கொடுத்தேன் என்கிறான். இவர் இல்லை நூறு என்கிறார். அவன் இன்னும் சிரித்தவாறே இல்லை 200 என்கிறான். அவருக்கும் முகம் மலரத் தொடங்க இல்லை நூறு என முரண்டு பிடிக்கிறார். இவன் இன்னும் தர்க்கமிட அவரும் தர்க்கமிட மாறி மாறி இருவர் முகமும் பூக்கத் தொடங்க புன்னகை பரவுகிறது இருவரிடமும், எல்லோரிடமும்.
ஒரு கட்டத்தில் ஒளித்து வைத்த ₹100 மெதுவாக நீட்ட விருட்டென பறித்துக் கொண்டு "சுறீரென" காலை இழுத்த படி நடக்கத் தொடங்கினான். சாப்பிட்ட காசும் கொடுத்து விட்டு எல்லோருக்கும் புன்னகையும் அளித்து விட்டு அவன் கீழிறங்கி போகவும் ஹோட்டலில் பரவுகிறது ஒரு வெற்றி. கல்லாக்காரர் சொன்னார், "ஒவ்வொரு நாளும் நான் தோற்றுப் போவதில் அவனுக்கு என்ன ஒரு ஆனந்தம்? வெறும் வயிறு மட்டும் நிறைந்தால் போதுமா?"
அன்றைய இரவின் வீதிகளில் நிலவின் ஒளியென நிறைந்து கிடக்கிறது கல்லாக் காரரின் அன்பு.
அன்பின் இனியது வேறேதும் உளதோ?
பதிலளிநீக்கு