திருவட்டாறு ஆதிகேசவன்.
மீள்
திருவட்டாறு ஆதிகேசவன்:
இரண்டு மூன்று மணிகள் வெவ்வேறு சப்தங்களில் ஒரே நேரத்தில் ஒருதாள லயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் பிரகாரங்கள் சுற்றி வடக்கு பிரகாரம் உள் நுழைந்தேன். தீபாராதனைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தாகி விட்டது. மேற்கு பிரகாரம் வழி உள்ளே நுழைகையில், கதவில் செதுக்கப்பட்டிருந்த பள்ளிகொண்ட பெருமாளும் பரிவார தெய்வங்களின் தத்துரூப கலையை விட்டுவர மனமில்லாமல் வந்தேன்.
ஒரு சங்கொலியின் ஊதல் உள் இருத்தியது. பெரியவர் ஒருவர் அனாயசமாக மூச்சை இழுத்து ஊதி கொண்டிருந்தார். எந்த தெய்வம் என்று பார்த்தேன். மேலே பாலாலய ஆதிகேசவன் என்றிருந்தது. வெள்ளைச்சர மல்லிகை இத்தனை அழகாக கோர்க்க முடியுமா எனும் படி அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. ஆதிகேசவ்ன் முகம் தூரத்தில் தெரியவில்லை. சற்று நெருங்கிப் போனேன். ஆதிகேசவன் பின்னிருந்த ஒற்றை எண்ணெய் விளக்கு சுடராடி, பின்னிருந்த சுற்றடுக்கு கண்ணாடியில் அடுக்குச் சுடராய் அசைந்து கொண்டிருந்தது.
முகம் ஒருமுறை வானத்தை நோக்கி திரும்பியது. நான் நின்றிருந்த திசையில் மேலே மூலவர் கருவறையின் முகடு. மரவேலைகளால் செம்பு பொதியப்பட்ட முகடு. என் பார்வை கீழிறங்க வில்லை. எங்கும் புறா எச்சம். பழமையில் இருந்து மாற்றம் செய்யவில்லை எதையும். ஏதோ மரபின் வெகுதூரம் ஒற்றை கணத்தில் செல்ல முடிகிறது. மீள வழியில்லை கிழக்கு மேற்கு முகடுகளுக்கு இடையே தொங்கு சங்கிலி பிணைக்கப் பட்டிருந்தது. இரண்டு புறாக்கள் வந்தமர்ந்தது. சங்கிலி அசையத் தொடங்கியது மணியோசையில் அசையும் சப்தம் வெளியே கேட்கவில்லை. மணியோசையும் புறாக்களுக்கு தொந்தரவாக இல்லை. மாறாக அதுதான் கூடடையும் சமிக்ஞையை ஆகவும் இருக்கலாம். இன்னும் சில புறாக்கள் வர ஆரம்பித்தன. சங்கிலி இப்போது வேகமாக ஆடியது. பகல்முழுவதும் சுற்றி திரிந்த இளஞ்சோலைகளை தூக்கி வந்திருக்கக் கூடும் இப்புறாக்கள். இரவினில் பெருமாளோடு விடிய விடிய கதைபேசி சோலைக்காற்றை விசிறிக் கொண்டிருக்கும்.
அனைவரின் பார்வையும் என் மீது விழுவதை உணர முடிந்தது. சின்னவன் நகர்ந்து வந்து என் அருகில் நின்று புறாக்களை பார்த்துக் கொண்டிருந்தான். அடுக்குத் தீபாராதனை நடந்து முடிகிறது. பெரியவர் ஒருவர் கையிலிருந்த தீபத்தை ஒற்றி வணங்கினேன். பெரியவன் நெருங்கி வந்து முகத்தை காட்டினான். லெட்சுமி சமேதமாக இருந்த உற்சவ மூர்த்தி சிலை அது. யாரோ கதலிக்குழை படைத்து இருக்கிறார்கள். வெளியே வந்தது மஞ்சளும் பச்சையுமாக வெள்ளித் தாம்பாளத்தில். முதல் குழையாக இருக்கலாம் தோட்டத்தில்.
மூலவரை பார்க்க வேண்டும். பாதை தெரியாமல் சுற்றி வந்தேன். ஒரு பெரியவர் வழி காட்டினார். உள்ளே சென்றேன். இருட்டு. வாசலில் நின்று கொண்டு சொன்னார். முதல் வாசலில் பெருமாளுடைய கால், இரண்டாவதில் உடம்பு, மூன்றாவதில் முகம் என்றார். நான் சன்னமான குரலில் ஸ்ரீபாதம், கௌஸ்தூபம், மணிமுடி என்றேன். அவர் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்தார் வருபவர்களிடம். நான் இந்த முறை சத்தமாக சொன்னேன் மணிமுடி என்று. அசைவற்ற சயனமாக வேண்டும் ஸ்ரீபாதமும், உந்தியும் பார்த்துக் கடக்கும் வரை சலனத்தில் இருந்தேன். மணிமுடியை பார்க்க நிமிர்ந்த அக்கணத்தில் நிச்சலனம். எதில் லயித்து போனேன் என்பதன் கணம் வெளியே வந்ததும் துலங்கியது. கூர்மையான நாசியும் மேடிட்டு மூடிய கண்களும், தீர்க்க நெற்றியும் அடுக்கு கேசமும், சொல்லமுடியாத சாந்தமான முகத்தையும் வடிக்க ஒரு புத்தனால் மட்டுமே முடியும். இதை வடித்த சிற்பி மகாபுத்தனாக இருக்கக்கூடும். புத்தனும் பெருமாளும் அமைதியில் கலக்கும் அந்த கணம் ஒரு கலையாகி பொங்கி பிரபஞ்சம் நிறைகிறது.
வெளியே வந்துவிட்டேன். வாசலில் ஒருவர் சொன்னார். இவர் தான் எல்லாவற்றுக்கும் ஆதிகேசவன் என்று. பிரம்மத்துக்கும் ஆதி. நாபிக்கமலம் இவருக்கு இல்லாததால். பிறப்பின் நிம்மதியின்மை நாபிக் கமலத்தில் தொடர்கிறது. முகத்தின் சாந்தம் இறவா நிலையை அடைகிறது. இன்னொரு முறை திருவட்டாறு செல்ல வேண்டும். இறவா நிலை அடைய வேண்டும்.
அமைதி எங்கும் நிறைவதாக.
கருத்துகள்
கருத்துரையிடுக